2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

லயோனிடம் தோற்றது சிற்றி

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டிகளில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டிகளில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், பிரெஞ்சு லீக் 1கழகமான லயோன் உள்ளிட்டன் அணிகள் வென்றன.

தமது மைதானத்தில் இடம்பெற்ற லயோன் அணியுடனான குழு எவ் போட்டியொன்றில் 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி தோற்றது. லயோன் சார்பாக, மக்ஸ்வெல் கொர்னெட், நபில் பெகிர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை பெர்னார்டோ சில்வா பெற்றார்.

இதேவேளை, தமது மைதானத்தில் இடம்பெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவுடனான குழு ஜி போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, இஸ்கோ, கரெத் பேல், மரியானோ டயஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு எச் போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மிரலெம் பிஜானிக் பெற்றிருந்தார்.

குறித்த போட்டியில், வலென்சியாவின் பின்கள வீரரான ஜெய்ஸன் முரில்லோவின் முடியைப் பிடித்தது போலத் தோன்றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்ச்சைக்குரிய விதத்தில் நேரடியாக சிவப்பு அட்டை காட்டப்பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுவிற்ஸர்லாந்துக் கழகமான யங் போய்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு எச் போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றிருந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, போல் பொக்பா இரண்டு கோல்களையும் அன்டோனி மார்ஷியல் ஒரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, றெனடோ சந்தேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X