2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லோர்ட்ஸ் டெஸ்டில் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் விளையாடுவர்?

Editorial   / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், லோர்ட்ஸில் நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்டில் இரண்டு அணிகளும் இரு சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்குவது குறித்து ஆலோசிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனைத் தொடர்ந்தும் கடுமையான வெப்பநிலை வானிலை வாட்டியெடுக்கின்ற நிலையில், வெப்பநிலைகள் 30 பாகை செல்ஸியஸுக்கு மேற்பட்டதாகவே காணப்படுகின்றது. அந்தவகையில், லோர்ட்ஸ் ஆடுகளமானது வரண்டதாகக் காணப்படுமென்ற நிலையிலேயே இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களைக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலாவது டெஸ்டில், இந்திய அணியின் தனித்த சுழற்பந்துவீச்சாளராக களமிறங்கிய இரவிச்சந்திரன் அஷ்வின் பிரகாசித்திருந்த நிலையில், முதலாவது டெஸ்டிலேயே பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்காத ஹர்டிக் பாண்டியாவுக்குப் பதிலாக மேலதிக சுழற்பந்துவீச்சாளரை இந்தியா களமிறக்கியிருக்கலாம் என விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், இரவிச்சந்திரன் அஷ்வின் தவிர இரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் குழாமில் மேலதிகமாகக் காணப்படுகின்ற நிலையில், இரவிச்சந்திரன் அஷ்வினோடு யாரை இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராகக் களமிறக்குவதென்ற சிக்கல் காணப்படுகின்றது.

இங்கிலாந்துக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பிரகாசித்த குல்தீப் யாதவ்வே பெரும்பாலும் உமேஷ் யாதவ்வை இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராகக் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் தேவையென்ற நிலையில், ஹர்டிக் பாண்டியாவை இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் பிரதியீடு செய்யும்போது துடுப்பெடுத்தாடக்கூடிய இரவீந்திர ஜடேஜா அவரைப் பிரதியீடு செய்தால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

மறுபக்கமாக, இங்கிலாந்து அணியும் முதலாவது டெஸ்டில் டேவிட் மலனை மொயின் அலி பிரதியீடு செய்வது மூலமாக இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியிருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்த மாற்றம் நிகழலாம் அல்லது பென் ஸ்டோக்ஸை மொயின் அலி பிரதியீடு செய்ய டேவிட் மலனின் இடத்தில் ஒலி போப் களமிறங்கலாம். அல்லது போக டேவிட் மலனை ஒலி போப்பாலும் பென் ஸ்டோக்ஸை கிறிஸ் வோக்ஸாலும் பிரதியீடு செய்து ஒரு சுழற்பந்துவீச்சாளரோடு இங்கிலாந்து களமிறங்கும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .