2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விலகல் சுற்றில் அத்லெட்டிகோ மட்ரிட்

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான விலகல் முறையிலான சுற்றுக்கு, ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் தகுதிபெற்றுள்ளது.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற, ரஷ்யக் கழகமான லொக்கோமோட்டிவ் மொஸ்கோவுடனான குழு டி போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று குழுவிலிருந்து இரண்டாவது அணியாக விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தது.

அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, ஜோவா பீலிக்ஸ், பிலிப்பே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று  அதிகாலை நடைபெற்ற ஏற்கெனவே விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஏற்கெனவே விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது.

பயேர்ண் மியூனிச் சார்பாக, கிங்ஸ்லி கோமன், தோமஸ் மல்லர், பிலிப் கோச்சினியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாகப் பெறப்பட்ட கோலை றயான் செஸ்னியோன் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று  அதிகாலை நடைபெற்ற துருக்கியக் கழகமான கலட்டாசரேயுடனான குழு ஏ போட்டியில், ஏற்கெனவே விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன், 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, மெளரோ இகார்டி, பப்லோ சபரியா, நெய்மர், கிலியான் மப்பே, எடின்சன் கவானி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயர் லெவர்குசனின் மைதானத்தில் இன்று  அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு டி போட்டியில், ஏற்கெனவே விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜுவென்டஸ் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கொன்ஸலோ ஹியூகைன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகேயின் மைதானத்தில் இன்று  அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஏ போட்டியில், விலகல் முறையிலான சுற்றுக்கு ஏற்கெனவே தகுதிபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 3-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.

றியல் மட்ரிட் சார்பாக, றொட்றிகோ, வின்சியஸ் ஜூனியர், லூகா மோட்ரிட்ச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கிளப் ப்ரூகே சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹன்ஸ் வனக்கென் பெற்றிருந்தார்.

இதேவேளை, குரோஷியக் கழகமான டினமோ ஸக்ரெப்பின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு சி போட்டியில், விலகல் முறையிலான சுற்றுக்கு ஏற்கெனவே தகுதிபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, 4-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.

மன்செஸ்டர் சிற்றி சார்பாக, கப்ரியல் ஜெஸூஸ் மூன்று கோல்களையும், பில் பொடென் ஒரு கோலையும் பெற்றனர். டினமோ ஸக்ரப் சார்பாகப் பெறப்பட்ட கோலை டனி ஒல்மோ பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .