2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விசாரணை தொடர்ந்தால் ஆஷஷில் ஸ்டோக்ஸ் இல்லை

Editorial   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் ஆரம்பிக்கும்போதும் பொலிஸாரின் விசாரணையின் கீழ் பென் ஸ்டோக்ஸ் காணப்பட்டால், ஆஷஷ் குழாமிலிருந்து ஸ்டோக்ஸ் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் உபதலைவரான பென் ஸ்டோக்ஸ், பிறிஸ்டலிலுள்ள இரவு விடுதியொன்றுக்கு வெளியே இடம்பெற்ற சம்பவமொன்றைத் தொடர்ந்து, உடல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தில், 27 வயதான நபரொருவர், முகக் காயங்களுக்காக, வைத்தியசாலை சிகிச்சையைப் பெற்றிருந்தார். குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு சில மணித்தியாலங்கள் முன்பே, ஸ்டோக்ஸ் பங்குபற்றிய மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்ற இரண்டு நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த ஆஷஷ் குழாமில் ஸ்டோக்ஸ் பெயரிடப்பட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இரண்டு நபர்களை நோக்கி, ஸ்டோக்ஸ் தாக்க முயலும் காணொளியை த சண் பத்திரிகை, தமது இணையத்தளத்தில் வெளியிட, அதைப் பார்த்த பின்னர், தமது சொந்த விசாரணையை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில், ஸ்டோக்ஸும் குறித்த சம்பவம் இடம்பெறும்போது ஸ்டோக்ஸுடன் இருந்த அலெக்ஸ் ஹேல்ஸும் மறு அறிவித்தல் வரை அணித் தெரிவில் கருத்திற் கொள்ளப்படமாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.

இச்சந்தர்ப்பத்தில், இம்மாதம் 28ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து செல்லவுள்ளதுடன், முதலாவது பயிற்சிப் போட்டி, அடுத்த மாதம் நான்காம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், முதலாவது டெஸ்ட் போட்டி, அடுத்த மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை எப்போது முடிவடையும் என காலவரையறையை பொலிஸார் வெளியிடாத நிலையில், இவ்வாறான வழக்குகளைத் தீர்க்க மாதங்களாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், அவுஸ்திரேலியாவுக்கு குழாம் புறப்பட முன்னர் விசாரணை முடிவடைந்தால், விசாரணை முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஆராய்ந்து, தனது இடத்தை ஸ்டோக்ஸ் தக்க வைப்பாரா அல்லது குழாமிலிருந்து நீக்கப்படுவரா என்ற முடிவை எடுக்கவுள்ளது.

உத்தியோகபூர்வமாக எந்த முடிவும் எடுக்கப்படாதபோதும், அவுஸ்திரேலியா செல்வதற்கான வாய்ப்பை ஸ்டோக்ஸ் கொண்டிருப்பதற்கு, மேலும் நடவடிக்கையெதுவையும் எதிர்கொள்ளாது அல்லது ஆறு வாரங்களுக்குள் முடிவடையக் கூடிய நீதிமன்ற வழக்கை கொண்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .