2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விருதுப் பட்டியலில் மீண்டும் ரொனால்டோ

Editorial   / 2018 ஜூலை 25 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான குறும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நடப்பு சிறந்த வீரராகவுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் உலகக் கிண்ண நட்சத்திரங்களான கிலியான் மப்பே, லூகா மோட்ரிட்ச் ஆகியோர் இக்குறும்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் நெய்மர் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

பலூன் டி ஓர் விருதிலிருந்து 2016ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் பிரிந்த பின்னர் உருவாக்கப்பட்ட குறித்த விருது வழங்கப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளும் கிறிஸ்டியானோ ரொனால்டோவே வென்ற நிலையில், கடந்தாண்டு ஜூலை மூன்றாம் திகதி முதல் இம்மாதம் ஜூலை 15ஆம் திகதி வரை வீரர்கள் வெளிப்படுத்திய பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இம்முறை விருந்து வழங்கப்படவுள்ளது.

இம்முறையும் சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவே இவ்விருதை வெல்வார் என பெரும்பாலாக எதிர்பார்க்கப்பட்டபோதும் சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றது தவிர உலகக் கிண்ணத்தில் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தி சிறந்த வீரராகத் தெரிவாகிய லூகா மோட்ரிட்ச், உலகக் கிண்ணத்தை வென்றதுடன் சிறந்த இளம் வீரராகத் தெரிவாகிய கிலியான் மப்பே, சம்பியன்ஸ் லீக்கை வென்றதுடன் உலகக் கிண்ணத்தையும் வென்ற ரபேல் வரானே ஆகியோர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிறந்த போட்டியை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் தவிர, உலகக் கிண்ணத்தில் பிரகாசிக்காவிட்டாலும் ஸ்பானிய லா லிகாவிலும் இங்கிலாந்து பிறீமியர் லீக்கிலும் முறையே பிரகாசித்த லியனல் மெஸ்ஸி, மொஹமட் சாலா ஆகியோரும் குறித்த பட்டியலில் காணப்படுகின்றனர்.

மேற்குறிப்பிட்டவர்கள் தவிர, இன்னொரு உலகக் கிண்ண வெற்றியாளரான அன்டோனி கிறீஸ்மன் குறித்த பட்டியலில் காணப்படுகின்றபோதும் மற்றொரு உலகக் கிண்ண வெற்றியாளரான போல் பொக்பா, இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் குறிப்பிடத்தக்களவு பிரகாசித்திருக்காத நிலையில் குறித்த பட்டியலில் இடம்பெறவில்லை.

இதேவேளை, உலகக் கிண்ண அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன், பெல்ஜிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஈடின் ஹஸார்ட், கெவின் டி ப்ரூனே ஆகியோரும் இப்பட்டியலில் காணப்படுகின்றனர்.

குறித்த விருது இவ்வாண்டு செப்டெம்பர் 24ஆம் திகதி இலண்டனில் வழங்கப்படவுள்ள நிலையில், செப்டெம்பர் மாதத்தில் குறித்த பட்டியலில் மூவர் கொண்டதாகக் குறைக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .