2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விஸ்டனின் உலகின் சிறந்த வீரராக கோலி

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஸ்டன் சஞ்சிகையின் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு தான் பங்கேற்ற அனைத்து வகையிலான போட்டிகளிலும் 2,818 ஓட்டங்களைப் பெற்றிருந்த விராத் கோலி, மூன்று இரட்டைச் சதங்கள் உள்ளடங்கலாக ஐந்து சதங்களை டெஸ்ட் போட்டிகளில் பெற்றிருந்ததோடு, இரட்டைச் சதம் தவிர்ந்த ஏனைய இரண்டு சதங்களைப் பெற்றபோது ஆட்டமிழக்காமலிருந்தார்.

இதேவேளை, உலகின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவி மிதாலி ராஜ் தெரிவாகியுள்ளார். உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்ற மிதாலி ராஜ், பெண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றவராக மாறியிருந்தார்.

இதுதவிர, இவ்வாண்டு முதல் வழங்கப்படுகின்ற முக்கியமான இருபதுக்கு – 20 வீரர் விருதை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான் பெறுகின்றார்.

இந்நிலையில், ஆண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களாக, உலகக் கிண்ணம் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் அன்யா ஷெர்ஷோபிள், அணியின் தலைவி ஹீதர் நைட், துடுப்பாட்ட வீரர் நட்டாலி சிவர் ஆகியோரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர் ஷை ஹோப், இங்கிலாந்து கவுண்டி அணியான எசெக்ஸின் வேகப்பந்துவீச்சாளர் ஜேமி போர்ட்டர் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்ற போட்டிகளில் பிரகாசித்தோரே இந்த ஐவரில் தெரிவாகுவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவ்வாண்டு விஸ்டன் சஞ்சிகையின் அட்டைப் படத்தில் அன்யா ஷெர்ஷோபிளே இடம்பெற்றுள்ளார். விஸ்டன் சஞ்சிகையின் அட்டைப் படத்தில் பெண்ணொருவர் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும். உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை அன்யா ஷெர்ஷோபிள் கைப்பற்றியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .