2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வென்றது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2018 ஜனவரி 10 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எவ்.எல்) கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியொன்றின் முதலாவது சுற்றுப் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி வென்றுள்ளது.

மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில், மாற்று வீரராகக் களமிறங்கிய சேர்ஜியோ அகுரோ, போட்டியின் இறுதிக் கணங்களில் பெற்ற கோல் காரணமாகவே, ஆரம்பத்தில் ஒரு கோல் பின்தங்கியிருந்தபோதும் மன்செஸ்டர் சிற்றி வெற்றிபெற்றது.

காலிறுதிப் போட்டியில், மன்செஸ்டர் யுனைட்டெட்டை வென்று அரையிறுதிக்கு வந்த பிறிஸ்டல் சிற்றி, இப்போட்டியில், அதிலும் முதற்பாதியில் மிகச் சிறப்பாக விளையாடியது.

முதற்பாதி முடிவடைய இருக்கும் நேரத்தில், மன்செஸ்டர் சிற்றியின் பின்கள வீரர் ஜோன் ஸ்டோன்ஸால், பிறிஸ்டல் சிற்றியின் மத்தியகள வீரர் பொபி றீட் வீழ்த்தப்பபட அவ்வணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அப்பெனால்டியை பொபி றீட் கோலாக்க முதற்பாதி முடிவில் பிறிஸ்டல் சிற்றி முன்னிலையிலிருந்தது.

எனினும், மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் கிளாடியோ பிராவோவிடமிருந்து பந்தைப் பெற்ற மத்தியகள வீரர் கெவின் டி ப்ரூனே, பந்தை பெனால்டி பகுதியை நோக்கி கொண்டு வந்து முன்கள வீரர் ரஹீம் ஸ்டேர்லிங்கிடம் வழங்க, அவர் அப்பந்தை கெவின் டி ப்ரூனேயிடம் வழங்க, கோல் கம்பத்திலிருந்து 16 அடி தூரத்திலிருந்து இரண்டாவது பாதி ஆரம்பமான 10ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்ற கெவின் டி ப்ரூனே கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். 

இந்நிலையில், இப்போட்டியை சமநிலையுடன், எதிரணியின் மைதானத்தில் பெற்ற கோலுடனும் தமது மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டிக்கு பிறிஸ்டல் சிற்றி செல்லப் போகின்றது என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், மன்செஸ்டர் சிற்றி இப்பருவகால போட்டிகளை வென்றது போல, போட்டியின் இறுதிக் கணத்தில், மத்தியகள வீரர் பெர்ணார்டோ சில்வா கொடுத்த பந்தை தலையால் முட்டி முன்கள வீரர் சேர்ஜியோ அகுரோ கோலாக்க, 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .