2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது பெண்கள் டெஸ்ட்

Editorial   / 2017 நவம்பர் 12 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய, இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கிடையிலான ஆஷஷ் தொடரின் ஒற்றை முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி இன்று முடிவடைந்தது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டமி பியூமெளண்ட் 70, அணித்தலைவி ஹீதர் நைட் 62 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், எலைஸி பெரி 3 விக்கெட்டுகளையும் ஜெஸ் ஜொனாசென், மேகன் ஸ்கட், தஹிலா மெக்ராத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 448 ஓட்டங்களைப் பெற்று தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், எலைஸி பெரி ஆட்டமிழக்காமல் 213, தஹிலா மெக்ராத் 47, அலைஸா ஹீலி 45 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லோரா மார்ஷ், சோபி எக்கில்ஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்க்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 2 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, இரண்டு அணித்தலைவிகளும் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக் கொள்ள தீர்மானித்தமையையடுத்து போட்டி முடிவுக்கு வந்தது. போட்டி முடிவுக்கு வருகையில், ஹீதர் நைட் ஆட்டமிழக்காமல் 79, ஜோர்ஜியா எல்விஸ் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். முன்னதாக, டமி பியூமெளன்ட் 37, லோரா வின்பீல்ட் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.  பந்துவீச்சில், தஹிலா மெக்ராத், அமன்டா வெலிங்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகியாக எலைஸி பெரி தெரிவானார்.

அந்தவகையில், இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தமை காரணமாக, இரண்டு அணிகளும் தலா இரண்டு புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ள, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 2-1 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா, அதில் பெற்ற நான்கு புள்ளிகளுடன் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆக, மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரைக் கைப்பற்றினால் ஆஷஷை அவுஸ்திரேலியா வெல்ல முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .