2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெள்ளையடிக்கப்படுவதைத் தடுக்குமா இங்கிலாந்து?

Editorial   / 2019 பெப்ரவரி 09 , மு.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி, சென். லூசியாவில் இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள், 2-0 என அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ள நிலையில் ஆறுதல் வெற்றியையாவது பெற்றுக் கொள்ளும் நோக்கில் இங்கிலாந்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து துடுப்பாட்டவீரர்களை மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தியிருந்த நிலையில், இப்போட்டிக்கான ஆடுகளமானது முதலிரண்டு போட்டிகளையும் விட வேகமானதாகவே காணப்படும் என எதிர்வுகூறப்படுகிறது.

அந்தவகையில், துடுப்பாட்டவீரர்களுக்கு சிக்கலானதாகவே இப்போட்டியும் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜோ றூட், சிரேஷ்ட வீரர்கள் ஜொனி பெயார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர் ஆகியோர் கூட்டிணைவாக பாரிய ஓட்டங்களைப் பெறுவதிலேயே இங்கிலாந்தின் பெறுபேறு தங்கியிருக்கிறது.

இதுதவிர, கடந்த போட்டியில் பல பிடியெடுப்புகளை இங்கிலாந்து தவறவிட்டிருந்த நிலையில், போட்டியை வெல்ல வேண்டுமாயின் அத்தவறுகள் நிச்சயம் திருத்தப்பட வேண்டும்.

அணியைப் பொறுத்தவரையில், இரண்டாவது டெஸ்டில் களமிறங்கிய அதேயணியே களமிறங்கும் என எதிர்பார்கப்படுகின்றபோதும் சாம் கர்ரனுக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

மறுபக்கமாக, பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டமை காரணமாக ஒரு போட்டித் தடையை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், இப்போட்டியைத் தவறவிடுகின்றமை அவ்வணிக்கு பாரிய இழப்பாகவே காணப்படுகின்றது.

அந்தவகையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவராக கிரேய்க் பிறத்வெய்ட் கடமையாற்றவுள்ள நிலையில், ஜேசன் ஹோல்டரை அணியில், குழாமில் ஹோல்டரின் தடையைத் தொடர்ந்து சேர்க்கப்பட்ட கீமோ போல் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே குழாமிலுள்ள மேலதிக வேகப்பந்துவீச்சாளரான ஒஷேன் தோமஸ், ஹோல்டரை அணியில் பிரதியீடு செய்யும் வாய்ப்பும் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .