2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் தொடரும்?

Editorial   / 2017 நவம்பர் 21 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப் பயணத்துக்கு தயாராகும் பொருட்டு, இலங்கைகெதிரான மிகுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்களும் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டெளணில், அடுத்தாண்டு ஜனவரி ஐந்தாம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டுடன், மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தென்னாபிரிக்கச் சுற்றுப் பயணம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்ட், நாக்பூரில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளதுடன், மூன்றாவது டெஸ்ட், டெல்லியில், அடுத்த மாதம் இரண்டாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில், இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின்போது, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி தலைமையிலான இந்திய அணி முகாமைத்துவம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளுடன் கதைத்ததாகவும் இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்கள் தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்துக்கான தயார்படுத்தலாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, கடினமான மற்றும் பவுண்ஸை வழங்கக்கூடிய வகையில் ஆடுகளங்கள் இருக்க வேண்டும் என ரவி ஷாஸ்திரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சொந்த மண்ணில், போட்டியின் முதல் நாளிலிருந்தே சுழற்சியை வழங்கும் ஆடுகளங்களில் டெஸ்ட் வெற்றிகளை இலகுவாகப் பெற்ற நிலையில், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்களை அமைக்குமாறான இந்திய அணி முகாமைத்துவத்தின் கோரிக்கை வழமைக்கு மாறானதாகவே இருக்கின்றது. அதுவும் ரவி ஷாஸ்திரி இந்திய அணியின் பணிப்பாளராக இருக்கும்போது, அதிகம் சுழற்சியை வழங்கிய நாக்பூர் ஆடுகளத்தில், தென்னாபிரிக்காவுக்கெதிராக மூன்றாவது நாளிலேயே இந்தியா வென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாக்பூர் ஆடுகளமும் புற்களால் மூடப்பட்டுள்ளதாகவும் நாளை மறுதினம் இரண்டாவது டெஸ்ட் ஆரம்பிக்கும்போதும் ஆடுகளம் பச்சையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் முதல் அரைப் பகுதியில் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளக் கூடியதாகவிருக்குமென்றும் கடைசி இரண்டு நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் பிரகாசிப்பர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதேவேளை, முதலாவது டெஸ்ட் இடம்பெற்ற கொல்கத்தா ஆடுகளமும் முதல் நாள் காலை தொடக்கம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்த நிலையில், அடுத்த இரண்டாண்டுகளில் வெளிநாடுகளுக்குச் சென்று நிறைய போட்டிகளில் விளையாடப் போவதாகவும் அதற்கு தயாராகவதாக, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .