2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஸ்டீவன்ஸ், பேர்ட்டன்ஸ் வென்றனர்

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை எட்டு வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்களின் டென்னிஸ் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், நேற்று இடம்பெற்ற குழுநிலைப் போட்டிகளில், உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீவன்ஸ், உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ் ஆகியோர் வென்றுள்ளனர்.

சிங்கப்பூரில் இடம்பெற்றுவரும் இத்தொடரில், சிவப்பு குழுவில் உலகின் நான்காம் நிலையான ஜப்பானின் நயோமி ஒஸாகாவை எதிர்கொண்ட சொலனி ஸ்டீபன்ஸ், ஒரு மணித்தியாலமும் 47 நிமிடங்களும் நீடித்த போட்டியில் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்றிருந்தார்.

இதேவேளை, மற்றைய சிவப்பு குழுப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பரை எதிர்கொண்ட கிகி பேர்ட்டன்ஸ், 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆரம்பமான இத்தொடரில், அன்று இடம்பெற்ற வெள்ளைக் குழுவின் போட்டிகளில், நடப்புச் சம்பியனும் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையுமான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி, 2-6, 4-6 என்ற நேர் செட்களில் உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவிடம் தோல்வியடைந்ததோடு, உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, 3-6, 3-6 என்ற நேர் செட்களில் உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினாவிடம் தோல்வியடைந்தார்.

அந்தவகையில், நாளை இடம்பெறவுள்ள சிவப்புக் குழு போட்டிகளில் மாலை ஐந்து மணிக்கு அங்கெலிக் கேர்பரை நயோமி ஒஸாகா எதிர்கொள்ளவுள்ளதுடன், அதைத் தொடர்ந்த போட்டியில் சொலனி ஸ்டீபன்ஸை கிகி பேர்ட்டன்ஸ் எதிர்கொள்கிறார்.

இத்தொடரில் பங்கேற்கும் எட்டு வீராங்கனைகளும் தலா நான்கு பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலுள்ள நால்வரும் தமக்கிடையே ஒவ்வொரு தடவை விளையாடி, ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறுபவர்கள் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறி இறுதிப் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X