2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்மித், வோணருக்கு ஓராண்டுத் தடை

Editorial   / 2018 மார்ச் 29 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், உப தலைவர் டேவிட் வோணருக்கு, திட்டமிட்டு பந்தைச் சேதப்படுத்த முயன்றதில் அவர்களின் வகிபாகத்துக்காக ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பந்தைச் சேதப்படுத்த முயன்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கமரோன் பேன்குரோப்டுக்கு ஒன்பது மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறித்த தடையின் அர்த்தப்படி சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மாத்திரமல்லாது அவுஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கிடையேயான போட்டிகளிலும் குறித்த காலத்துக்கு விளையாட முடியாது என்பதுடன், பிக் பாஷ் லீக்கிலும் விளையாட முடியாது.

எவ்வாறெனினும், கழகப் போட்டிகளில் விளையாட முடியுமென்பதுடன், இந்தியன் பிறீமியர் லீக்கிலும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் குறித்த தடையின்படி விளையாடக் கூடியதாக இருந்தது.

இந்நிலையில், குறித்த தகவல் வெளியாவதற்கு முன்னர் இந்தியன் பிறீமியர் லீக்கின் சண் றைசர்ஸ் ஹைதரபாத் அணியின் தலைவரான டேவிட் வோணர் தனது பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த தடை விவரம் வெளியாகியமையைத் தொடர்ந்து இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து ஸ்டீவ் ஸ்மித்தையும் டேவிட் வோணரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நீக்கியுள்ளது.

இதேவேளை, பந்தை சேதப்படுத்தும் திட்டத்தை தீட்டியதுடன் அதை இளம் வீரரொருவரைப் பயிற்றுவித்ததுடன் இவ்விடயங்களை போட்டி அதிகாரிகளிடமிருந்து டேவிட் வோணர் மறைத்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எதிர்காலத்தில் தலைமைத்துவப் பதவிகளுக்கு டேவிட் வோணர் கருத்திற் கொள்ளப்படமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித்தும் கமரோன் பேன்குரோப்டும் தங்களது தடைகளைப் பூர்த்தி செய்த பின்னரும் ஓராண்டுக்கு தலைமைத்துவப் பதவிகளுக்கு கருத்திற் கொள்ளப்படமாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

மூன்று வீரர்களும் தமது தடைகளுக்கெதிரான மேன்முறையீடு செய்யலாம் எனவும் அவ்வாறு மேன்முறையீடு செய்யப்படும் பட்சத்தில் சுயாதீன ஆணையாளரொருவரின் கீழ், அவரின் முடிவின் கீழ் பொதுவிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ விசாரணை இடம்பெறுமெனவும் எவ்வளவு பேரையும் வீரர்கள் சாட்சிகளாக அழைக்கலாமென்பதுடன் சட்ட ரீதியான பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர், கமரோன் பேன்குரோப்ட் ஆகிய மூவரும் தென்னாபிரிக்காவிலிருந்து நேற்று புறப்பட்ட நிலையில், இவர்களுக்குப் பதிலாக மற் றென்ஷோ, அடம் வோஜஸ், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் தென்னாபிரிக்காவுக்கெதிரான நான்காவது டெஸ்டுக்கான அவுஸ்திரேலியக் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கமரோன் பேன்குரோப்ட் பந்தைச் சேதப்படுத்த முயன்ற நாடாவை தனது நீளக்காற்சட்டைப் பையிலிருந்து எடுத்து நீளக்காற்சடைக்குள் வைப்பதற்கு காரணமாக செய்தியை பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் மூலமனுப்பிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமனுக்கு பந்தைச் சேதப்படுத்த முயன்றது தெரியாதென அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து டெரன் லீமன் விலகுவார் என்று கூறப்பட்டிருந்தபோதும் அவர் அப்பதவியில் தொடருகின்றார்.

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான குறித்த சம்பவம் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்டின் நான்காம் நாளில் அவுஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கிய டிம் பெய்னே, நாளை ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுக்கெதிரான நான்காவது டெஸ்டிலும் அவுஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.

இதுதவிர, அவுஸ்திரேலிய அணியின் தலைமைக் குழுவிலிருந்த ஜொஷ் ஹேசில்வூட், மிற்சல் ஸ்டார்க், நேதன் லையன் ஆகியோருக்கு பந்தைச் சேதப்படுத்தும் திட்டம் தெரியாதெனவும் விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X