2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஸ்மித்தை பின்தள்ளி முதலாமிடத்துக்கு முன்னேறினார் கோலி

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், முதலாமிடத்திலிருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை இரண்டாமிடத்துக்கு பின்தள்ளி, இரண்டாமிடத்திலிருந்த இந்திய அணியின் தலைவர் விராத் கோலி முதலாமிடத்தைப் பிடித்துள்ளார்.

எட்ஜ்பஸ்டனில், கடந்த புதன்கிழமை ஆரம்பித்து நேற்று முன்தினம் முடிவடைந்த இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 200 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் 934 புள்ளிகளைப் பெற்றே முதலாமிடத்துக்கு விராத் கோலி முன்னேறியுள்ளார்.

எவ்வாறெனினும், கோலியின் தனிப்பட்ட பெறுபேறுகளுக்கப்பால், ஏனைய இந்திய அணி வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தாலும் சாம் குரானின் சகலதுறையாட்டத்தாலும் பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சாலும் குறித்த டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த 934 புள்ளிகளே, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் கோலி பெறும் அதிகூடிய புள்ளிகள் என்பதுடன், இந்திய வீரரொருவர் பெறும் அதிகூடிய புள்ளி என்பதோடு, ஆசிய வீரரொருவர் பெறும் இரண்டாவது அதிகூடிய புள்ளி ஆகும். இலங்கையணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார 938 புள்ளிகளைப் பெற்றமையே ஆசிய வீரரொருவர் பெற்ற அதிகூடிய புள்ளிகள் ஆகும்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த குமார் சங்கக்கார, விராத் கோலி விளையாடுவதைப் பார்க்கும்போது, அவர் தலைசிறந்த இந்திய துடுப்பாட்ட வீரராகலாம் என்பதுடன், அவரது தலைமுறையில் அவர் இலகுவாக சிறந்தவரெனவும் அவர் இன்னும் முதிர்ச்சியடைவார் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, 2011ஆம் ஆண்டு ஜூன் மாததத்தில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டென்டுல்கர் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்ததன் பின்னர் இந்திய வீரரொருவர் முதலிடத்தில் இருப்பது இதுவே முதற்தடவையாகும்.

கோலியையும் டென்டுல்கரையும் தவிர, இந்தியாவின் முன்னாள் தலைவர்களான ராகுல் ட்ராவிட், சுனில் கவாஸ்கர், திலீப் வெங்கசர்க்கார் மற்றும் கெளதம் கம்பீர், விரேந்தர் ஷெவாக் ஆகியோரே டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஏனைய இந்தியர்கள் ஆவர்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில், இரண்டாமிடத்திலிருந்த கோலி, முதலாமிடத்திலிருந்த ஸ்மித்தை பிரதியிட்டதைத் தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராத் கோலி, 2. ஸ்டீவ் ஸ்மித், 3. ஜோ றூட், 4. கேன் வில்லியம்சன், 5. டேவிட் வோணர், 6. செட்டேஸ்வர் புஜாரா, 7. திமுத் கருணாரத்ன, 8. தினேஷ் சந்திமால், 9. டீன் எல்கர், 10. ஏய்டன் மர்க்ரம்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .