2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹங்கேரியன் குரான் பிறீ: வெர்ஸ்டப்பனை முந்தி வென்றார் ஹமில்டன்

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனை முந்துவதற்கான சிலிர்ப்பூட்டும் போராட்டமொன்றை முன்னெடுத்த பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், அவரை முந்தி ஹங்கேரியன் குரான் பிறீயை வென்று கொண்டார்.

அந்தவகையில், நேற்று  இடம்பெற்ற குறித்த பந்தயம் முழுவதும் ஹமில்டன், வெர்ஸ்டப்பன் மற்றும் அவர்களது அணிகளிலுள்ள திட்டமிடலாளர்களிடையேயான பரபரப்பான போட்டியைத் தொடர்ந்து நடப்பு பருவகாலத்தில் எட்டாவது வெற்றியைப் பெற்றுள்ள ஹமில்டன், இவ்வாண்டு ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் தனது முன்னிலையை அதிகரித்துக் கொண்டுள்ளார்.

முன்னதாக 38ஆவது சுற்றில் நான்காவது வளைவின் வெளியே வெர்ஸ்டப்பனை முந்துவதற்கான துணிகரமான முயற்சியொன்றை மேற்கொண்டு அவரை முந்துவதை நெருங்கியிருந்த ஹமில்டன், அவரை விட மேலதிகமாக ஒரு தடவை டயர்களை மாற்றி இறுதிக் கட்டத்தில் புதிய டயர்களுடன் காணப்பட்டு 20 சுற்றுகளுக்குள் தனக்கும், வெர்ஸ்டப்பனுக்குமிடையிலான 20 செக்கன் வித்தியாசத்தை இல்லாமற் செய்து பந்தயம் முடிவடைவதற்கு மூன்று சுற்றுக்கள் இருக்கையில் அவரை முந்தி பந்தயத்தை வென்றிருந்தார்.

இப்பந்தயத்தில் மூன்றாமிடத்தை ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியல் வெட்டல் பெற்றிருந்தார்.

அந்தவகையில், இன்னும் ஒன்பது பந்தயங்களும், அதிகபட்சமாக 234 புள்ளிகளும் பெறக்கூடியதாக இருக்கையில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள சக மெர்சிடிஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸையும் விட 62 புள்ளிகள் அதிகமாக ஹமில்டன் பெற்றுள்ளார்.

250 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஹமில்டனும், 188 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் போத்தாஸும், 181 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் வெர்ஸ்டப்பனும் காணப்படுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .