2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த நோக்கம் நிறைவேறியது’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்க முடியுமென   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்தமை பற்றி இன்று (11) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இதனைக் கூறினார். 

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, “இறைவன் எமக்குத் தந்த சந்தர்ப்பத்தை பாராளுமன்றத்தில் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினோம். உடன் பலன் கிடைக்காததற்காக, எமது வியூகங்கள் பற்றி சிலர் தரக் குறைவாக விமர்சித்தது மட்டுமன்றி கேலியும் செய்தனர்.

“முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கு எப்படியாவது அனுமதி எடுத்துவிட வேண்டுமென உழைத்த நாங்கள், சந்திக்க நேரிட்ட சங்கடங்கள் ஏராளம்.

“ஜனாஸாக்களை அடக்கம் செய்யலாம் என உலக முஸ்லிம்களின் உள்ளங்களையே, தேன் தொட்டியாக்கிய ராஜபக்ஷ அரசின் இந்த முடிவை வரவேற்கின்றேன். உள்ளங்களை ஆள்கின்ற இறைவன் ஆட்சியாளர்களின் மனநிலைகளை மாற்றிவிட்டான். 

“எனினும், ஏற்கெனவே எமது சகோதரர்கள் சிலர் எரிக்கப்பட்டமை கண்ணீரைச் செந்தணலாக்கிக் கொண்டே இருக்கிறது. எமது நம்பிக்கையாலேயே, இத்துயரங்களை ஆற்றுப்படுத்துகிறோம். இந்நிலையில், பிரதமரின் அறிவிப்பால் இனிமேல், எமது உறவுகள் நெருப்பில் எரியப்போவதில்லை.

“20ஐ ஆதரித்த எமது அரசியல் வியூகம் வென்று விட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே. இதற்காக உழைத்த அரசாங்கம், பஷில்ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் இதை அறிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .