2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’20ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டமைப்புக்குள் குழப்பம்’

பேரின்பராஜா சபேஷ்   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையே தீர்க்கமான முடிவில்லாத காரணத்தால்தான், கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தக் குழப்பத்தின் வெளிப்பாடுதான், த.தே.கூவின் அறுதிப் பெரும்பான்மை கொண்ட வட மாகாணசபையால் நிராகரிக்கப்பட்ட 20ஆவது திருத்த சட்டமூலத்தை, கிழக்கு மாகாணசபையில் உள்ள த.தே.கூ உறுப்பினர்கள் ஆதரித்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் (18) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,

“த.தே.கூவினர், அதிகாரப் பரவலாக்கலின் கீழ், ஒரு சுயாட்சி தேவை எனக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள். இந்நிலையில், மத்திய அரசாங்கம், மாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பறித்துக்கொள்வதை ஏற்க முடியாது.

“தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வா, மற்றும் சம்பந்தன் ஐயா ஆகியோர், ஜனநாயகத்தை மதிப்பவர்கள். நாடாளுன்றம் அல்லது மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்ததும், ஜனநாயக ரீதியில் அவற்றைக் கலைத்துவிட்டு, மீண்டும் மக்களின் ஆணைபெற்று, புதிய ஆட்சி உருவாக்க வழியமைக்க வேண்டும் அல்லது மக்களின் ஆணைக்குவிட்டு, அவற்றை நீடிக்க வேண்டுமே தவிர, மத்திய அரசாங்கத்தின் தீர்மானமாகக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தக் கூடாது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற பங்காளிக் கட்சியான டெலோவுக்குள் முரண்பாடு உள்ளது. அவர்களுக்குள் நிலையான முடிவு இல்லை. கிழக்கு மாகாணசபையில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது, டெலோ உறுப்பினர் ஒருவர் ஆதரிக்கிறார், மற்றையவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

“ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்குள், அங்கு கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்கிறார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், உற்சாகத்துடன் கையுயர்த்தி ஆதரிக்கிறார்.

“தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்தோ அல்லது மத்திய குழுவை அழைத்தோ, 20ஆவது திருத்தம் தொடர்பாக ஆராயவில்லை. கடந்த நாடாளுமன்ற அமர்வில் கூட நான் கலந்துகொண்டேன். இதிலும் திருத்தம் தொடர்பாக எந்தவிதக் கருத்துகளும் தெளிவுபடுத்தப்படவில்லை.

“தற்போது கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நான், பகிரங்க எதிர்பையே வெளியிடுவேன்.

“அரசமைப்பு அல்லது சட்டத் திருத்தங்கள் தொடர்பாக பிரச்சினைகள் எழும்போது அனைவரும் ஒன்றுகூடி ஆராய்வார்களாகவிருந்தால், வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் ஒருமித்த கருத்தை தெரிவிப்பதற்கு வாய்ப்பாக அமையும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .