2024 மார்ச் 28, வியாழக்கிழமை

​அமெரிக்க அருட்தந்தை மில்லருக்கு நினைவஞ்சலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 18 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு தசாப்தங்களாக வாழ்ந்து, மக்களுக்குத் தொண்டாற்றி வந்த, அமெரிக்க அருட்தந்தையும் கல்விமானும் சமூகப் பணியாளருமான பெஞ்சமின் ஹென்றி மில்லருக்கு, நினைவஞ்சலி நிகழ்வு நடத்த ஒழுங்குகளைச் செய்துள்ளதாக, மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் அறிவித்துள்ளது.

இந்த நினைவஞ்சலி நிகழ்வு, மட்டக்களப்பு பயனியர் வீதியை அண்டி அமைந்துள்ள ரோட்டரி நிலையத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், துறைசார்ந்தவர்கள் என இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி ஏ.ஏ.நவரட்ணம், நிகழ்வின் பிரதான நினைவுரையை நிகழ்த்தவுள்ளார்.‪

அருட்தந்தை மில்லர், தனது 94ஆவது வயதில், கடந்த முதலாம் திகதி காலமானார்.

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 1925ஆம் ஆண்டு ஒக்டோபெர் 11ஆம் திகதி பிறந்த மில்லர், இலங்கை சுதந்திரம் பெற்று சில மாதங்களே ஆகி இருந்தபோது, இலங்கை மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்து மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகவும், அந்தக் கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியினுடைய பயிற்றுவிப்பாளராகவும், இருந்து பணியாற்றி புனித மைக்கல் கல்லூரியின் யேசு சபை இல்லத்திலேயே மரணித்தார்.

இடைப்பட்ட காலங்களில் இவர் பல்வேறு சமூகப்பணிகளால் அறியப்பட்ட ஒருவராக விளங்கினார்.

புகழ்பெற்ற கல்விப் பணியாளராகவும், மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும், இவர் விளங்கினார்.

'மட்டக்களப்பு சமாதான குழு' வை உருவாக்கி இலங்கையில் யுத்தம் நிலவிய காலப் பகுதியில் இந்த சமாதானக் குழுவினூடாக ஏராளமான பணிகளைச் செய்தார்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டமை, இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றவர்களைக் கண்டுபிடிக்க உதவியமை, யுத்தத்தின் போது இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இயங்கியமை என்பன யுத்த காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான சமூநலப் பணிகளாகும்.

இலங்கையில் 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்த கால கட்டத்தில், இலங்கையின் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான உறுப்பினராக, இலங்கை அரசாங்கம்  அடிகாளர் பெஞ்சமின் ஹென்றி மில்லரை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமாதானத்துக்காக அடிகாளர் மில்லர் ஆற்றிய பணிகளைக் கௌரவித்து, இலங்கை தேசிய சமாதானப் பேரவை அவருக்கு 2014ஆம் ஆண்டு, பிரஜைகள் சமாதான விருதினை வழங்கி, கௌரவித்தது.

இலங்கையில் இறுதியாக வாழ்ந்த அமெரிக்க ஜேசு சபையின் இறுதித் துறவி பெஞ்சமின் ஹென்றி மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X