2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘அரசியல் செயற்பாடுகளுக்கு ஆசிரியர்களை அனுமதிக்க முடியாது’

பேரின்பராஜா சபேஷ்   / 2019 மார்ச் 07 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆசிரியர்கள், கல்விப் புலத்திலுள்ள சில உத்தியோகத்தர்களை, அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதென, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன், ஊடகங்களுக்கு, நேற்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதும் சில அரசியல்வாதிகள், தமது அரசியல் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்களை விடுவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடா, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களிலும், மூதூர், கிண்ணியா போன்ற கல்வி வலயங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாணவர்களின் பாட, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இவற்றைக் கருத்திற்கொள்ளாமல், மாகாணக் கல்வித் திணைக்களம் சில ஆசிரியர்களை விடுவித்து, அரசியல்வாதிகளுடன் இணைத்துள்ளமை, ஆசிரியர் சேவைக்குரிய தரத்தைக் கொச்சைப்படுத்தியிருப்தோடு, மாணவர்களின் கல்வி உரிமையையும் மீறியுள்ளதாகவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களிலும் ஆசிரியர் ஆலோசகர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் பதவிகளுக்கு நியமிப்புச் செய்வதில் அரசியல் தலையீடுகள் நடைபெற்றுள்ளன எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், சில பாடசாலைகளில் ஆசிரியர்கள், அரசியல்வாதிகளின் பிரதிநிதிகளாகவே செயற்படுகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கிழக்கு மாகாணத்தில் விடுவிப்புச் செய்யப்பட்டு, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் கல்விப் புலத்திலுள்ளவர்களை உடன் செயற்படும் வகையில், அவர்கள் முன்பு சேவையாற்றிய பாடசாலைகளுக்குத் திரும்பவும் அனுப்புவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கையெடுக்க வேண்டுமென, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X