2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அரசியல்வாதிகள் முன்வைத்த எந்தப் பிரச்சினைக்கும் பிரதமர் பதிலளிக்கவில்லை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 29 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தைத் திறந்துவைத்த நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் உட்பட பிரதேச அரசியல்வாதிகள் முன்வைத்த எந்தப் பிரச்சினைக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருக்கவில்லை.

ஏறாவூருக்கு இன்று (29) வருகை தந்த பிரதமர், பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து, அதை மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். சுமார் 45.8 மில்லியன் ரூபாய் செலவில், இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தற்போதைய நகர சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபைர், ஏறாவூர் நகர மேயர் றம்ழான் அப்துல் வாஸித் ஆகியோரால், பிரதமரின் கவனத்துக்கு முன்வைக்கப்பட்ட எந்தப் பிரச்சினைக்கும் பிரதமர் பதிலளித்துப் பேசவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சன அடர்த்தி மிக்க, அதேவேளை சுமார் 8 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் சுமார் 55 ஆயிரம் சனத்தொகையைக் கொண்ட ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவு, காணிப் பற்றாக்குறையால் திணறுகிறது. அதனால் மனிதாபிமானப் பிரச்சினைகளும், சுகாதாரப் பிரச்சினைகளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.

விவசாயிகளான ஏறாவூர் பிரதேச மக்கள், 1985ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் அகதிகளாக்கப்பட்டு, தாங்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டிய பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் காணியை இழந்திருக்கின்றார்கள். அந்த இடங்களில் மீளக்குடியமர முடியாமல், தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, ஏறாவூரில் மாரிமழைப் பருவகாலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை எதிர்கொள்வதற்கும், விஞ்ஞானபூர்வமான சாக்கடைக் கழிவகற்றல் திட்டமும் திண்மக் கழிவகற்றல் திட்டமும் இப்பிரதேசத்தில் மேற்கொள்வதற்காக ஏற்கெனவே பிரதமரால் ஒப்புதலளிக்கப்பட்டன. ஆனால் அதன் தொடர் நடவடிக்கைகள் எவையும் இதுவரை இடம்பெறவில்லை.

சுற்றுலா வழிகாட்டல் மையத்துக்கான அபிவிருத்திகள் தொடங்கப்பட்ட நிலையில் தொடர முடியாமல் நிதி ஒதுக்கீடின்றி, இடைநடுவில் அவ்வேலை நிற்கிறது.
இவை போன்ற பல்வேறு பிரதேசத்தின் பிரச்சினைகள் சார்ந்த வேண்டுகோள்கள், பிரதமரிடம், பிரதேச அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டன.

ஆயினும், இவற்றில் எதற்குமே பிரதமர் நேரடியாகப் பதிளிக்காமல், "கடந்த பல தசாப்த காமாக யுத்தத்தால் அழிவடைந்த வடக்கு - கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தவும், வங்கிகள் மூலமாக உதவிகள் வழங்கப்படுகின்றன" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X