2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஆசிரியர் நியமன நிபந்தனைகளை, பிரதேசங்களுக்கு ஏற்றவாறு தளர்த்தவும்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 மார்ச் 27 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபந்தனைகளை, பிரதேசங்களுக்கு ஏற்ற விதத்தில், நெகிழ்வான போக்கில் தளர்த்த வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மாறாகத் தற்போதுள்ள நிபந்தனைகளானது, வேறு வலயங்கள் அல்லது வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்களை இறக்குமதி செய்து, மீண்டும் குறித்த சில ஆண்டுகளில் அவர்களது பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்வது போன்று தான் அமையுமென்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்துக்காக வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பில், இன்றையதினம் (27) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தெடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, போரதீவுப் பற்றுப் பிரதேசங்களில் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறினார்.

அத்துடன், கடந்த காலத்தில் கஷ்ட, அதி கஷ்ட பிரதேச பாடசாலைகளின் வெற்றிடங்களை மையமாக வைத்து நியமனங்களைப் பெற்ற பிற வலயத்தவர்களும் பிற மாவட்டத்தினரும், நியமனம் பெற்று மிகக் குறுகிய காலத்தில், தத்தமது பிற மாவட்டங்களுக்குத் தற்காலிய இடமாற்றம் பெற்றுச் சென்றனர் என, அவர் தெரிவித்தார்.

 ஆனால், அவர்களின் பெயர்கள் கஷ்ட, அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் வேலை செய்வது போன்று ஆளணிப் பட்டியலில் காண்பிக்கப்பட்டிருந்ததாகவும்  இதனால் வெற்றிடங்கள் மறைக்கப்பட்டிருந்தன எனவும் குற்றஞ்சாட்டினார்.

இதனாலேயே கல்குடா, மட்டக்களப்பு மேற்கு பொன்ற வலயங்கள் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறையுள்ள வலயங்களாகவே செய்யப்பட்டிருந்தன எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, மட்டக்களப்பு வலயம், கல்முனை வலயம், சம்மாந்துறை வலயம் போன்ற வலயங்களில் அளவுக்கதிகமான ஆசிரியர்கள் நிரப்பப்பட்டிருந்தனர் எனவும் சில வலயங்களில் மிகை நிரம்பலும், குறித்த சில வலயங்களில் பற்றாக்குறையை ஏற்படுத்தக் கூடிய விதத்திலேயே, மாகாணக் கல்வி நிர்வாகம் செயற்பட்டிருந்ததாகவும் ஸ்ரீநேசன் எம்.பி தெரிவித்தார்.

இது போன்ற விடயத்திலேயே, மாகாணக் கல்விப் பணிப்பாளர், கல்வியமைச்சின் செயலாளர், மாகாணப் பகிரங்க சேவை ஆணைக்குழு என்பவை ஆளமான கவனத்தைச் செலுத்த வேண்டுமென, அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும்,  மாகாணக் கல்வியில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பின்னடைவை ஆளமாக ஆராய்ந்து, ஆசிரியர் நியமனங்களை வழங்க வேண்டுமென்றார்.

பணிப்பாளர்கள், அதிகாரிகளை, வெறுமனே அரசியல் நோக்கம் கருதி இடமாற்றங்கள் செய்யாமல், திறமை, ஆளுமை, அர்ப்பணிப்பு உள்ளவர்களுக்கு கட்சி, அரசியலுக்கு அப்பால் சந்தர்ப்பத்தை அளியுங்கள். அது ஒன்றுதான் கல்வி அபிவிருத்திக்கும், பிற அபிவிருத்திகளுக்கும் வழிகோலும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .