2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஆட்சியமைக்க திண்டாட்டம்’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தேர்தல் முறைமையால், பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் கட்சிகளால் பெரும்பான்மையைப் பெற முடியாமல் சபையை அமைப்பதற்கு மிகவும் ஒரு திண்டாட்டமான சூழ்நிலைகள் காணப்பட்டனவென, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் தெரிவித்தார்.

வாழைச்சேனை, கிண்ணையடி, மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா, கழக மைதானத்தில் நேற்று (16)  மாலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகக் கொண்டு வந்த பெருமை, தமிழ் பேசும் மக்களுக்கு உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தான் ஜனாதிபதியாக வந்தால் புரையோடிப்போயுள்ள எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டு வருவேன், ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன், பழைய முறையிலான தேர்தலை அறிமுகப்படுத்துவேன் என்ற மூன்று விடயங்களை முன்னிறுத்தி உறுதிமொழிகளை அவர் வழங்கினார்.

“எனினும், இதில் எதுவும் நடைபெறாமல் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. பழைய முறையிலான தேர்தல் முறையை கொண்டு வருவேன் என்று கூறிவிட்டு, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பழைய முறையுமல்ல, புதிய முறையுமல்லாத ஒரு களப்பு முறையிலான தேர்தலை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.

“இன்று அவரே கூறுகின்றார், இந்தத் தேர்தல் முறை இந்த நாட்டுக்கு உகந்ததல்ல, இதனால் கூடுதலான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உருவாகியுள்ளனர். இதனைக் குறைக்க வேண்டும் என்றும், இது முறையான தேர்தல் முறையல்ல என்றும் கூறியுள்ளார்.

“தெற்கிலே ஐக்கிய தேசிய கட்சி கூடுதலான வட்டாரங்களில் வெற்றி பெற்றாலும் மாற்றுக் கட்சியாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பணத்தைக் கொடுத்து உறுப்பினர்களை வாங்கும் நிலை, இந்த தேர்தல் முறைமையினால் உருவாகியுள்ளது.

“மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் காத்தான்குடி நகர சபையைத் தவிர மற்றைய மன்றங்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை.

“தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மன்றங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் கூடுதலான ஆசனங்களை பெற்றிருந்தது. ஆனால், வாழைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியை த.தே.கூ. கைப்பற்றிக் கொள்ள முடியாமல் போய் விட்டது” என்றார்.

மில்லர் விளையாட்டுக் கழகத் தலைவர் எஸ்.குகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கிண்ணமும் பரிசில்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .