2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இரக்கம் காட்டாமல் மரண தண்டனை வழங்க வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 15 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகத்தைச் சீரழித்து, நாட்டைக் குட்டிச்சுவராக மாற்றக்கூடிய மோசமான நபர்களுக்கு, இரக்கம் காட்டாமல், மரண தண்டனை வழங்க வேண்டுமென, என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

தானும் இரக்கம் காட்டுபவனே என்றும் தெரிவித்த அவர், தற்போது அஸ்கிரிய பீடம், மல்வத்து பீடம் போன்ற பௌத்த அமைப்புகள் கூட, இவ்வாறானவர்களுக்கு இரக்கத்தைக் காட்டக் கூடாது எனக் கூறியிருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, இன்று எமது நாட்டுக்கு எதிர்காலமே இல்லாத ஒரு சூழ்நிலை இருக்கின்றபடியால், இப்படியாக போதைப்பொருட்கள் மூலம், சமூகத்தை அழிக்கின்றவர்களை நிச்சயமாகத் தண்டிக்க வேண்டுமென்றும், இவ்வாறானவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை அவசியமென்றும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், இப்படியான போதைப்பொருள் கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், ஆவா குழுக்கள், கிறீஸ் மனிதர்கள் போன்ற பிரச்சினைகள் காணப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், இவ்வாறான செயல்களைச் செய்தால் பாரிய தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே, இப்படியான குற்றச்செயல்கள் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் அண்மைக்காலக் கவனம், சிறைச்சாலைகளுக்குள் இருந்துகொண்டு, போதைப்பொருள் வர்த்தகத்தை மேற்கொள்பவர்கள் மீதே திரும்பியிருந்த நிலையில், ஸ்ரீநேசன் எம்.பியும், அவர்கள் மீதே கவனம் செலுத்தினார்.

“இவ்வாறான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சிறைச்சாலையில் இருந்துகொண்டே, போதைப்பொருள் வர்த்தகத்தை மிகவும் இலாபகரமாக நடத்திக்கொண்டு வருகின்றார்கள் என்றால், அவர்கள் திருந்துவதற்குரிய அறிகுறிகள் எவையும் தெரியவில்லை.

“இவர்கள் மீண்டும், மீண்டும் தவறு செய்துகொண்டிருப்பதால், அவர்களுக்கு உச்சபட்சமான மரண தண்டனை வழங்கப்படும்போது, அதனைப் பார்த்தாவது மற்றையவர்கள் திருந்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்” என்றும் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “போதைப்பொருள் கடத்தலுக்கு, சில அரசியல்வாதிகள் கூட இயக்குநர்களாக இருக்கின்றார்கள். வெலே சுதா பிடிபட்டபோது, ஓர் அரசியல்வாதியைக் கூறியிருக்கின்றார். எனவே, இந்த வர்த்தகத்தில் யார் ஈடுபட்டாலும், உச்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .