2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கை அரசாங்கத்தின் பேச்சில் ‘சர்வதேசத்துக்கு நம்பிக்கையில்லை’

Editorial   / 2018 மார்ச் 12 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்

“இலங்கை அரசாங்கத்தின் பேச்சில் நம்பிக்கை இழந்த நிலையில் சர்வதேச சமூகம் காணப்படுகின்றது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“சர்வதேசத்தை ஏமாற்றி விடலாம் என இலங்கை அரசாங்கம் தப்புக்கணக்கு போட்டால் எதிர்காலத்தில் சர்வதேச சட்டத்தின் இறுக்கத்துக்குள்ளாக வேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்படும்.

“ஆரம்ப காலகட்டத்தில் உள் நாட்டு பொறிமுறைகள் மூலமாக இந்த விடயங்களை கையாளலாம் எனச் சொல்லிக் கொண்டிருந்த இலங்கை அரசாங்கம், இழுத்தடிப்புகளையும் கால தாமத்தினையும் மேற்கொள்கின்றமையால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலையில் சர்வதேச சமூகம் காணப்படுகின்றது.

“இதனடிப்படையில், இனி வருகின்ற காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யுத்த குற்றங்கள் தொடர்பான விடயங்களுக்கு சர்வதேச சட்டத்தைப் பாய்ச்ச வேண்டும் என்ற கருத்தை மனித உரிமைச் செயலாளர் முன் மொழிந்திருக்கின்றார்.

“இனிமேல் சர்வதேச சட்டத்தின் பிரமாணங்களுக்கு அமைவாக மனித உரிமை பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பொறுப்புக் கூறுகின்ற அந்தப் பொறிமுறையின் போது, தனது செயற்பாட்டை சர்வதேச சட்டத்துக்கு அமைவாக கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தையும் கூறியுள்ளார்.

“எனவே, சர்வதேசத்தை ஏமாற்றி விடலாம் என இலங்கை அரசாங்கம் தப்புக்கணக்குப் போட்டால் எதிர் காலத்தில் சர்வதேச சட்டத்தின் இறுக்கத்துக்குள்ளாக வேண்டிய நிலை இலங்கை அரசுக்கு ஏற்படும் என்பதை நினைத்துக் கொள்ள வேண்டும்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஒரு நிரந்தரமான நீடித்து நிலைத்து நிற்க கூடிய மற்றவர்களில் தங்கியிருக்காத சுய நிர்ணயம், சயாட்சியோடு சம்பந்தப்பட்ட விடயங்களுடன் கூடிய ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றது.

“அதனையும் ஒரு வகையில் ஏமாற்றுகின்ற அல்லது காலம் கடத்துகின்ற போக்கு இருக்குமாக இருந்தால், இனி வருகின்ற காலத்தில் இலங்கை அரசாங்கத்தை நம்பாத ஒரு நிலையில் சர்வதேசத்தை முழுமையாக நம்பக் கூடிய சூழ் நிலையைக் கூட இந்தப் போக்குகள் ஏற்படுத்தும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .