2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இலச்சினைகள் முக்கியமல்ல; இலட்சியமே முக்கியம்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 01 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘இலச்சினைகள் முக்கியமல்ல; இலட்சியமே முக்கியம்’ என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் நேற்று (31) தெரிவித்தார்.

 

மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் நடைபெற்ற வேட்பாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் தனித்து மரச்சின்னத்திலும், சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்திலும் போட்டியிடும்.

“அதேபோன்று மட்டக்களப்பு மாநகர சபை, ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் வாகரை பிரதேச சபை போன்ற இடங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றது.

“ஏறாவூரில் எமது அணிக்குள் இரண்டு அணிகள் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடுகின்றனர். காத்தான்குடியில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

“இங்கு சின்னங்கள் முக்கியமல்ல இலட்சியங்கள் தான் முக்கியமானதொன்றாகும். நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில், மக்களோடு மக்களாக சமூகத்தில் பணியாற்றுகின்ற வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளோம்.

“மண்முனைப் பற்று பிரதேச சபை தேர்தலில் காங்கேயனோடை வட்டாரத்தில் எமது வேட்பாளர் மதீனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தாலும், எமது சின்னமான மரச்சின்னம் நிராகரிக்கப்படவில்லை.

“இங்கு மரச்சின்னத்துக்கு வாக்களித்து மரத்தை வெற்றிபெறச் செய்யும் போது, நாம் மதீனை மண்முனைப் பற்று உறுப்பினராக தெரிவு செய்வோம்.

“ஒரு வேட்பாளரின் வேட்புமனுப்பத்திரம் நிராகரிக்கப்படும் போது அந்தக் கட்சியின் சின்னம் இருக்கும் அந்த சின்னத்துக்கு அதிக வாக்குகள் அளிக்கப்படுமாக இருந்தால், மற்றைய கட்சியிலிருந்து உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதென்பது இங்கு ஒரு பிரச்சினையான விடயமாகும்.

“இதனை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைப் போன்று கட்சியின் செயலாளர்களின் கூட்டத்திலும் இதுதொடர்பில் ​கலந்துரையாடியுள்ளோம்.

“தேர்தல் முடிந்தவுடன் எங்களுக்கு அவ்வாறான நிலைமை ஏற்படுமாக இருந்தால், நாங்கள் அதனைச் சட்டமா அதிபரை அணுகி சட்டத்தின் ஊடாக கையாள்வோம்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .