2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’இளம் தலைமுறையினரே இலங்கையின் எதிர்காலம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இளம் தலைமுறையினரே இலங்கையின் எதிர்காலம் என்பதுடன், பாதுகாப்பான மற்றும் விருத்தியான சூழலில் வழங்கப்படும் தரமான கல்வியிலேயே அவ்வெதிர்காலம் தங்கியுள்ளது என, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்க பொது பிரதி தூதுவர் ரொபர்ட் ஹில்டன் (Deputy Chief of Mission Robert Hilton) தெரிவித்தார்.

95 மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்திற்கு, மூன்று மாடிக் கட்டிடத்தினை திறந்து வைத்த பின்னர் அவர் உரையாற்றினார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

1976 இல் கட்டப்பட்ட இந்தப் பெண்கள் பாடசாலையானது  இலங்கை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் சிபாரிசுக்கு அமைய, ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைபீடத்தினால் (PACOM) மேம்படுத்தல் நிர்மாணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சு இணைந்து இந்த பாடசாலையை நிருமாணித்துள்ளன.

பாடசாலையில் இக் கட்டிடம் சேர்க்கப்படுவதன் மூலம் 480 மாணவர்கள் வரை மேலதிகமாக கல்வி கற்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கியம் மற்றும் சகவாழ்வு பற்றி பாடல்கள் பாடிய மாணவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.   

மாணவர்கள் புதிய கருத்துக்களை ஆராயவும், பழைய எண்ணங்களை சவாலுக்கு உட்படுத்தவும் தேவையான பாதுகாப்பான சூழலை இப்புதிய கட்டடத்தின் சுவர்கள் வழங்கும்.

வெவ்வேறு வனப்புடைய திட்ட யோசனைகளை யன்னல் வழியாக நோக்கவும், புதிய வாய்ப்புக்கள் கதவுகள் மூலமும் திறக்கும். இதையே பாடசாலைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இலங்கை இளம் சமுதாயம் கற்கவும், பரீட்சிக்கவும், சவாலுக்குட்படுத்தவும் ஒரு வாய்ப்பு ஏற்படுகின்றது.  இவ் வாய்ப்புக்கள் அனைத்தும் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். எனது சமுதாயம் உள்ளிட்ட பல சமுதாயங்கள் பெண்களுக்கு கல்வி வழங்குவதில் பின்தங்கி வந்துள்ளனர்.

இலங்கையின் வருங்கால பெண் தலைவர்களுக்கு உதவி வழங்குவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். எவ்வாறாயினும், பாடசாலை என்பதை விட மேலும் பல சிறப்புக்கள் இக்கட்டிடத்திற்கு உள்ளது.

நாம் நிற்கும் இப்பிரதேசம் சனத்தொகை செறிவானதும், துரதிஷ்டவசமாக இயற்கை அழிவுகளுக்கு முகம்கொடுக்கும் பகுதியாகவும் உள்ளது.

ஆகவே, நாம் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து, இயற்கை அனர்த்தங்களின் போது உள்ளூர் மக்களுக்கு தேவையான தற்காலிக தங்குமிடமாகவும் இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இங்குள்ள சமையற்கூடத்தில் 500 பேருக்குத் தேவையான உணவைத் தயாரிக்க முடிவதுடன், புதிய 3,500 லீட்டர் நீரேந்துக் கட்டமைப்பும், 2000 லீட்டர் மற்றும் 500 லீட்டர் நீர்த் தாங்கிகளும் தற்காலிகமாக தங்குபவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீரை வழங்கும்.

ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைபீடம் மற்றும் அமெரிக்கத் தூதரகக் குழுவினரும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ  மத்திய நிலையத்துடன், கடந்த 4 ஆண்டுகளாக இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனை இன்றைய சிறப்பான நாளில் நாம் காண்கின்றோம்.

ஒன்றிணைந்த மற்றும் நல்லிணக்கமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக அமெரிக்கத் தூதரகம் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் ஒத்துழைப்பு முயற்சியின் ஒரு பாகம் இதுவாகும்.

இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், நல்லாட்சி மற்றும் சட்ட வழி செயற்படல், அனைவருக்கும் சம உரிமை மற்றும் சம வாய்ப்புக்காக செயற்படும் இவ்வேளையில், நாம் அவர்களுக்கு தேவையான தோள் கொடுத்து உதவுவோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .