2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை உள்ளீர்க்க வேண்டும்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் உள்ளீர்க்கப்பட வேண்டுமென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூ. பிரசாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதேச ரீதியாக நடத்தப்படும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு, சபைகளின் மேயர்கள் அல்லது தவிசாளர்களைத் தவிர, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை அழைப்பதில்லை என, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, மாவட்ட செயலகத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே, மேற்கண்ட வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

“மக்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் ஜனநாயகத்தின் குரலாக, ஒவ்வொரு வட்டாரத்துக்கும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பிரதேச ரீதியாக மக்களின் கருத்துகளை வெளிக்கொண்டுவரும் விகிதாசார பிரதிநிதிகளும் இருக்கின்றனர்.

“குறித்த பிரதேசத்தின் மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய சுமையும், உள்ளூராட்சி உறுப்பினர்கள் என்ற வகையில், இவர்களின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது" என்று அவர், அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி நகர சபையைத் தவிர, ஏனைய அனைத்து சபைகளிலும், எந்தக் கட்சியோ, சுயேட்சைக் குழுவோ அறுதிப்பெரும்பான்மை பலம்பெற்று ஆட்சி அமைக்கவில்லை என்பதையும், பல கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் சேர்ந்தே புரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஆட்சி நடைபெறுகின்றமையும் அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்நிலையில், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ள அனைத்து திணைக்கள அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளும் பிரதேச அபிவிருத்திக் குழுவில், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படுமானால், அவர்கள், தாங்கள் சார்ந்த சமூகத்தின் கருத்துகளை எங்கு தெரிவிப்பார்கள்?

“ஜனநாயக ரீதியாக மக்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட இடங்கொடுக்காது, தூரநோக்கிய சிந்தையுடன் செயற்பட வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்துகொள்ளுங்கள்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, மீண்டும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுவதற்குப் பரிசீலனை செய்யுமாறு, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .