2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஊரடங்குச்சட்ட காலப்பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமலிலுள்ள காலப்பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளனவென வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டவான் பகுதியில் சிறிய சில்லறைக் கடையினை உடைத்து பொருள்கள் மற்றும் பணங்கள் என்பன சனிக்கிழமை இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடையின் உரிமையாளர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கடையை உடைத்துத் திருடப்பட்டுள்ளதாகவும், காலையில் எழுந்து கடையைப் பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் இயங்கும் மீராவோடை குடும்ப நல உத்தியோகத்தர் (கிளினிக் நிலையம்) உடைத்து அதிலிருந்த பெறுமதியான தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்டுள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் கிளினிக் வரும் குழந்தைகளுக்கு சுகாதாரப் பழக்கவழக்கங்கள் தொடர்பான ஒளிப்பதிவுக் காட்சிகளைக் காண்பிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மீராவோடை அமீர் அலி வித்தியாலயம், மீராவோடை உதுமான் பாலர் பாடசாலைகளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்து தண்ணீர் மோட்டரும் அண்மையில் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X