2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எட்டு பாடசாலைகளை தரமுயர்த்த நடவடிக்கை

வா.கிருஸ்ணா   / 2020 ஜனவரி 29 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளை தெரிவுசெய்யும் வகையிலான விசேட கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (29) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 05 கல்வி வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள், பிரதி கல்விப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு கல்வி வலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஆசிரியர் பற்றாக்குறைகள், வளப்பங்கீடுகள் குறித்தும் ஆராயப்பட்டன.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த வியாழேந்திரன் எம்.பி,

“அரசாங்கத்தின் புதிய திட்டத்துக்கு அமையவும் எங்களின் வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்துக்கு  8 தேசிய பாடசாலைகள் கிடைத்திருக்கின்றன.

“அந்த வகையில், வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் கதிரவெளி மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாகத் தெரிவு செய்திருக்கின்றோம். அத்துடன், கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் கிரான் மகா வித்தியாலயத்தையும் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குள் செங்கலடி மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாகவும் தெரிவு செய்திருக்கின்றோம்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் ஒரு தேசிய பாடசாலையும் வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் ஒரு தேசிய பாடசாலையுமாக தரமுயர்த்தப்படவுள்ளது.

“பட்டிருப்பு கல்வி வலயத்துக்குள் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குள் ஒரு தேசிய பாடசாலையும் இல்லாததால் அங்கும் ஒரு தேசிய பாடசாலையை உருவாக்க நாங்கள் திட்டமிட்டிருக்கின்றோம்.

“அதுபோன்று மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு நகரில் நான்கு தேசிய பாடசாலைகள் உள்ளன. ஆனால், மண்முனைப்பற்றில் எந்த தேசிய பாடசாலையும் இல்லை. அதனால் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

“வவுணதீவில் கன்னங்குடா மகா வித்தியாலயத்தையும் தேசிய பாடசாலையான தரமுயர்த்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். ஏனைய தேசிய பாடசாலைகள் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடப்படுகின்றன. பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்பாக கல்வி அமைச்சிடம் இதனை நாங்கள் ஒப்படைக்கவேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .