2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எல்லைக்கல் நட்டமையால் வடிச்சல் பகுதியில் பதற்றம்

வா.கிருஸ்ணா   / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகிலுள்ள வடிச்சல் பகுதியிலுள்ள காணியொன்றில், மட்டக்களப்பு மாநகர சபையினர், எல்லைக்கல் நடும் பணிகளை இன்று (30) காலை முன்னெடுத்தனர். எனினும், அங்குவந்த சிலர், அதனைத் தடுக்கு முற்பட்டமையால், அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.

அரச காணியென அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியில், மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன் தலைமையிலான குழுவினரே எல்லைக்கல் நடும் பணிகளை, ​இன்று காலை 10: 30 மணியளவில் முன்னெடுத்தனர்.

இதன்போது, அங்குவந்த ஒரு குழுவினர், மாநகர சபையின் செயற்பாட்டை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மாநகரசபை  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஸ்தலத்துக்கு வந்துவிட்டனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

எல்லைக்கல் நடும் பணிகள் முன்னெடுக்கவிருந்த காணி, அரச காணியாகும். எனினும், அக்காணி தன்னுடையதென உரிமைகொண்டாடும் ஒருவர், அதுதொடர்பில், பொலிஸ் நிலையத்தில் எவ்விதமான முறைப்பாட்டையும் செய்யாது, அக்காணிக்கு உரிமை கொண்டாடுவதுடன், பொலிஸ் நிலையமொன்றுக்குச் ​சொந்தமான வாகனத்திலேயே அவ்விடத்துக்கு அவர் வந்துள்ளார்.

அதன்பின்னரே, மாநகர சபையின் செயற்பாட்டுக்கு அவர், இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவத்தைக் கேள்வியுற்று அங்கு விரைந்த பொலிஸார்,  மாநகர மேயரை, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்ல முற்பட்டனர். எனினும், அங்கிருந்த இளைஞர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால், பொலிஸார் அவ்விடத்திலிருந்து அகன்றுசென்றுவிட்டனர். இந்தப் பதற்றமான நிலைமை, பிற்பகல் 1 மணியளவில் நீடித்தது.

சட்டபூர்வமற்ற ஆவணங்களுடன் ஒரு குழு நீண்டகாலமாக, குறித்த காணியை அபகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது என  மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சரவணபவன் குற்றஞ்சாட்டினார்.

குறித்த காணியை அபகரிக்க கடந்த ஆண்டு முயற்சி மேற்கொண்ட நிலையில் அப்பகுதி பொதுமக்களால் அது தடுக்கப்பட்டது. மீண்டும் கடந்த ஜூலை மாதமும் அவ்வாறான நிலைமையொன்றே ஏற்பட்டது. எனினும், அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் அம்முயற்சியும் தடுத்து நிறுத்தப்பட்டது என மாநகர மேயர் தெரிவித்தார்.

இந்நிலையில், அக்காணியின் மீதான நடவடிக்கையை நிறுத்துமாறு அரச அதிபர், பிரதேச செயலாளருக்கு அமைச்சர் வஜிர அபேவர்தனவால் பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த மாநகர மேயர் சரவணபவன், அக்காணி அரசாங்க காணி என்பதற்கான சகல ஆவணங்களும் தன்னிடம் உள்ளதெனத்  தெரிவித்துள்ளார்.

வடிகான்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மாநகரசபைக்கு உள்ளது. அந்த அடிப்படையில் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டது என்றும் அறியமுடிகின்றது.

எந்தவிதமான சட்டரீதியான  ஆவணங்களும்  இல்லாமல்,  பொலிஸாருடன் வந்த நபர்,  பிரதேச செயலாளர் தனக்குக் கடிதமொன்றை வழங்கியுள்ளதாகத் தெரிவித்திருந்தார். எனினும், அவர், எந்தவோர் ஆவணத்தையும் கொண்டுவந்திருக்கவில்லை என்றும் மாநகர மேயர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .