2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’ஒற்றுமையாக வாழ அரசியல்வாதிகள் விடவில்லை’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கிலும் கிழக்கிலும், தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு, அரசியல்வாதிகள் விடவில்லையென, இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் விஸ்ணுகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.எஸ்.சுஜானின் ஏற்பாட்டில், நேற்று (03) மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்துரையாற்றிய அவர், தமது அரசியல் சுய இலாபங்களுக்காகவும் தாங்கள் வாழவேண்டுமென்பதற்காகவும், இனத்துவேசங்களை ஏற்படுத்தி, மக்களுக்குள் குரோதங்களை அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினர்.

“இனத்துவேசம், அழியாத மரம்போல் வளர்ந்து கொண்டிருக்கின்றது. மரத்தை வெட்டினாலும், வேர்கொண்டு தளைப்பது போலவே, இந்த இனத்துவேசம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் பொதுமக்கள் மத்தியில், ஒற்றுமையும் சகோதரத்துவமும் வெளிப்படுத்தப்படல் வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் வாக்களித்தமையால் பயனில்லை என்று குறிப்பிட்டார். அத்தோடு, "நமது மக்களை வாழ வைக்க வேண்டுமென, ஒருவரும் நினைப்பதில்லை. எதிர்காலத்திலாவது, தமிழ் மக்கள் ஒன்றுசேர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுங்கட்சியில் தமிழ் அமைச்சர் ஒருவரை உருவாக்க வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .