2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடத்தப்பட்டபோது இடம்பெற்ற விபத்தில் கைதான இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 26 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, சந்திவெளிப் பிரதேசத்தில் இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட வேளையில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும் ஜுலை மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வினோபா இந்திரன், சனிக்கிழமை (24) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு -கொழும்பு நெடுஞ்சாலையில் சந்திவெளிப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (23) இரவு  இடம்பெற்ற விபத்தில்  மட்டக்களப்பு, ஏரிக்கரை வீதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் திவ்யசாகரி (வயது 19) என்பவர் மரணமடைந்துள்ளார். இதேவேளை, இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, விபத்தில் மரணமடைந்த இளம் பெண்ணும் அவரது தாயும் பெரிய தந்தையும் கடந்த வெள்ளிக்கிழமை  திருக்கோணேஸ்வரம் கோவிலுக்குச்; சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இரவு 10 மணியளவில் இவர்கள் தேநீர் அருந்துவதற்காக சந்திவெளியில் காரை சாரதி நிறுத்தியுள்ளார்.

அவ்வேளையில் அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், இப்பெண்ணைக் கைப்பற்றி மோட்டார் சைக்கிள் ஆசனத்தின் நடுவில் இருத்திக்கொண்டு அதிவேகமாகப் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிளை  அப்பெண்ணின்; தாயும்  பெரிய தந்தையும் காரில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதன்போது, அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இவர்களின் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கடத்தப்பட்ட பெண்ணும் அப்பெண்ணைக்  கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் உடனடியாகச் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சிகிச்சை பெற்றுவந்த அப்பெண், சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை (24) காலை மரணமடைந்துள்ளார்.

அப்பெண்ணைக்; கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அப்பெண்ணையும் தங்கள் இருவரையும் காரில் வந்தவர்கள் காரால் மோதியும் அதன் பின்னர் கடுமையாகத் தாக்கியதன் காரணமாகவும் தாங்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, பெரிய தந்தையும்  கார் சாரதியுமே கைதுசெய்யப்பட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அப்பெண்ணின் பிரேத பரிசோதனையானது, குருநாகல் பொது வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (25)  மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், அப்பெண்ணுக்கும் அப்பெண்ணைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவருக்கும் இடையில் பல வருடங்களுக்கு முன்னர் பராயமடையாத வயதில் இருந்துவந்த காதல் தொடர்பு காரணமாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டு சமரசமாகத் தீர்த்து வைக்கப்பட்டதாகவும் பின்னர், இப்பெண்ணை உயர் கல்விக்காக அவரது தாய் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்ற விடயம் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவிலிருக்கும் போதும், அப்பெண் தொடர்ந்து தனது காதலனுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில்  தெரியவந்துள்ளது எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பெண், சமீப சில நாட்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியிருந்த நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .