2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’காணிகளை இழந்தோமாயின் எதையும் பெற முடியாத சமூகமாக மாறி விடுவோம்’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 26 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

'எதிர்காலத்தில் எமக்குகென்று ஓர் ஆட்சி முறையை ஏற்படுத்திக்கொள்வதற்காக நாங்கள் காணிகளைப் பாதுகாக்க  வேண்டும் என்பதுடன்,  எமது காணிகளை இழந்தோமாயின் எதையும் பெற முடியாத சமூகமாக மாறி விடுவோம். இந்த விடயத்தில் எமது மக்கள் அக்கறையாக இருக்க  வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

ஏறாவூர் கருமாரி அம்மன் ஆலயத்தில் வாயில் கோபுர நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'எமது மாவட்டத்தில் பல பிரமாண்டமான ஆலயங்கள் உள்ளன. ஆனால், அந்த ஆலயங்கள் சமூக சேவையில் ஈடுபடுவது  மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, எமது  மக்களுக்குச் சேவையாற்றுவதற்கான ஆலயங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும்.

'ஒவ்வொரு மதங்களிலும்  மதகுருமார்கள்; மத போதனையில் ஈடுபடுகின்றார்கள்.  ஆனால்,  சைவ சமயத்தைப் போதிப்பதற்கு சரியான வழிகாட்டல்கள் இல்லாத காரணத்தால், எமது பாரம்பரியத்திலிருந்து மாறிக்கொண்டு செல்கின்றோம்' என்றார்.  

'தற்போது ஆலயக் காணிகள் சுவீகரிக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதுடன், எல்லைக் கிராம ஆலயங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. சில இடங்களில் ஆலயக் காணிகளை எமது இனம் சாராதவர்களுக்கு விற்பனை செய்கின்றார்கள். இவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.

'இந்து ஆலயங்களைச் சரியான முறையில் இயக்கி கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தால்,  பிற மதத்தவர்கள் இங்கு வந்து மத மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

மெழுகுவர்த்தி கொண்டு விளக்கு ஏற்றுவது மேலைநாட்டுக் கலாசாரம். இது இந்துக்களின் கலாசாரம் இல்லை. மேலைத்தேயக் கலாசாரம் இந்து ஆலயங்களில் பின்பற்றப்படுவதற்கு ஆலய மத குருமார்கள் மற்றும் நிர்வாகங்கள் இடமளிக்கக் கூடாது. தமிழர்களுடைய கலாசாரம் சைவத்தோடு இணைந்த கலாசாரம். எமது கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X