2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கால்நடை வளர்ப்பாளர்களை ‘ஊக்குவிப்பது அவசியம்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கைக்குப் பங்கம் இல்லாமல், கால்நடை வளர்ப்பாளர்கள் செயற்படுகின்ற போது, அவர்களுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு, மக்கள் பிரதிநிதிகளாகிய தமக்கும், அரச அதிகாரிகளுக்கும் உள்ளதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச பண்ணையாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் நாகேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க, எறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கார்மலைப் பிரதேசத்துக்கு நேற்று (24) விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள பண்ணையார்களின் இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், மக்கள், பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மை என்பவற்றைக் கூடுதலாகச் செய்து வருகின்றார்கள் எனச் சுட்டிக்காட்டியதுடன், கால்நடைகளை வளர்க்கும்போது, பல சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கவே செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

ஏனெனில், பயிர்ச்செய்கையின் மத்தியில் கால்நடைகளை வளர்ப்பது மிகக் கடினமானது என்பதால், பயிர்ச்செய்கைக்கு அப்பால் சென்று இவற்றை வளர்க்கும் நிர்ப்பந்தமான சூழ்நிலையில், பண்ணையாளர்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

வன இலாகா காப்பாளர்கள், அண்டைய அயலிலுள்ள பயிர்ச்செய்கையாளர்கள் போன்ற காரணிகளால் ஏற்படுகின்ற பல சிரமங்களுக்கு மத்தியில், கால்நடை வளர்ப்பை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு, கால்நடை வளர்ப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்று இனங்காணப்பட்ட மேய்ச்சல் தரை இடங்களை வரையறுத்து, வர்த்தமானியில் பிரசுரிப்புச் செய்கின்ற போது, தொல்லைகள் இல்லாமல் பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளைப் பராமரிக்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கூட, இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .