2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணம் ‘கல்வியில் பின்னடைவு’

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாணம், கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள, அதிகாரிகள் முன்வரவேண்டுமென, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன், இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, கிழக்கு மாகாணம் மிக மோசமான கல்விப் பின்னடைவைக் கண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பின்னடைவுக்கான பொறுப்புக்கூறலை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, அதன் செயலாளர், மாகாணப் பணிப்பாளர், ஏனைய அதிகாரிகள் ஆகியோர் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

பரீட்சை அடைவு மட்டத்தை ஒப்பிடுகையில், மாகாண மட்டத்தில், கிழக்கு மாகாணம் 8ஆம் நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள், மிகவும் கவலைக்குரிய மோசமான பெறுபேறுகளால், கல்வி நிலைமையில் வீழ்ச்சியடைந்துள்ளன.

“நாட்டின் 25 மாவட்டங்களில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றதில், மட்டக்களப்பு மாவட்டம் 23ஆவது நிலையையும் திருகோணமலை மாவட்டம் 25ஆவது நிலையையும் அடைந்திருப்பது கவலையளிக்கிறது.

“வலய மட்டத்தில் நோக்குகையில், குறிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதில் மூதூர், கல்குடா மேற்கு, கிண்ணியா ஆகிய வலயங்கள், மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

“தேசிய ரீதியில் கல்வியில் முன்னிலை வகித்த மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம், 67ஆவது நிலைக்குத் தள்ளப்படிருப்பது, கிழக்கு மாகாணத்தின் மோசமான கல்வி வீழ்ச்யையும், வினைத்திறனற்ற நிர்வாக செயற்பாடுகளையும் சுட்டிக்காட்டிருக்கிறது" என்று, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக, ஜனாதிபதியின் செயலணிக் குழுவுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர், கல்வியமைச்சின் செயலாளர் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணத்தின் கல்விப் பின்னடைவு தொடர்பாக ஆராயப்பட வேண்டும் என்று, அவ்வறிக்கையில் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .