2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கிழக்கையும் தமிழர்களையும் நேசிக்கின்ற தமிழ்த் தலைமைகளுடன் இணையத் தயார்’

Editorial   / 2019 மார்ச் 06 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம்

எந்தத் தேர்தல் என்றாலும் கிழக்கு மாகாணத்தையும் கிழக்கிலுள்ள தமிழர்களையும் நேசிக்கின்ற தமிழ்த் தலைமைகளுடன் இணைந்துசெல்வதற்கு தாங்கள் தயாராகவிருக்கின்றோம் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கல்வி மேம்பாடு, சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் சுவிஸ் உதயம் அமைக்கான கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, மட்டக்களப்பில் நேற்று முன்தினம் (04) நடைபெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணத்துக்கான தலைவர் எம்.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக, வியாழேந்திரன் எம்.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய வியாழேந்திரன் எம்.பி, கிழக்கு மாகாணத்தில், தமிழர்களின் இருப்பு பேராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் “நல்லிணக்கம்” என்ற பெயரில் தமிழர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

ஓர் இனத்தின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நான்கு தூண்களாக நிலம், மொழி, கல்வி, பொருளாதாரப் பண்பாட்டு ஆகிய அம்சங்கள் உள்ளனவென சுட்டிக்காட்டிய அவர், இந்த நான்கு தூண்களையும் நாங்கள் பாதுகாக்க வேண்டுமென்றார்.

ஆனால், கிழக்கு மாகாணத்திலே குறித்த நான்கு தூண்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன எனவும் பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றன எனவும் தமிழர்கள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கு போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.

காணி சார்ந்த பிரச்சினைகள், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்காக தாங்களாகவே வீதிக்கு இறங்கிப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும் இந்த அவலநிலை தொடருமானால் எங்களுடைய இனம் இன்னோர் இனத்திடம் கையேந்துகின்ற நிலைக்கு நாங்களே கொண்டுவிட்ட பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடுவோம் எனவும், வியாழேந்திரன் எம்.பி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்ச் சமூகத்தை நேசிக்கக்கூடிய தமிழ்த் தலைமைகளெல்லாம் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய சூழல் இருக்கின்றதெனவும் கிழக்கு மாகாணத்தில் யாராது தமிழர்களைப் பற்றிச் சிந்தித்தால், அவர்களை இலகுவாகத் துரோகிகள் என்றும் கள்ளர்கள் என்றும் பச்சை குத்திக் காட்டுகின்ற நடைமுறை இருக்கின்றதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .