2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கைதிகளின் உயிரோடு விளையாடாதீர்’

வடிவேல் சக்திவேல்   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சிறைக்கைதிகளின் உயிரோடு விளையாடுகின்ற செயற்பாடாக எதுவும் அமைந்துவிடக்கூடாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், “யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி வருவார் என்றோ வராமாட்டார் என்றோ எண்ணிய நிலையில், சிறைக்கைதிகள் தொடர்பான போராட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். ஆனால், ஜனாதிபதி அந்த இடத்தில் இறங்கிவருகின்றபோது, குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உணர்ச்சிவசப்படாமல் தங்களது கருத்துகளை முன்வைத்திருக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று (18) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“யாழில் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, அதற்குச் சம்மதம் தெரிவித்து, பேச்சுவார்த்தைக்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதுவே இன்றைய காலகட்டத்துக்கு உகந்ததாகும். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பேச்சவார்த்தை மூலம் தீர்வை எட்டியிருக்கலாம்.

“ஜனாதிபதி, தனக்குத் தற்கொலைத் தாக்குதல் நடத்தவந்த போராளியைக் கூட மன்னித்து விட்டவர். அந்த இடத்தில் நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் எமது கெட்டித்தனத்தால் குறித்த விடயத்தில் வெற்றிகண்டிருக்கலாம்.

“இதனை விடுத்து, இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் ஏதாவது உயிரிழப்புகள் வந்தால் அதனை வைத்துக் கொண்டு நாங்கள் அரசியல் செய்யலாம் என்று எண்ணக்கூடாது.

“குறித்த விடயம் தொடர்பாக கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமசந்திரனின் கருத்துக்கும் சிவாஜிலிங்கத்தின் கருத்துக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. இதில் சிவாஜிலிங்கம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி அழைத்தபோது, எங்கு எவ்விடத்தில் என்பவற்றைக் கேட்டறிந்திருக்க வேண்டும். இது கைதிகளின் விடுதலைக்கு எடுத்த ஒரு முயற்சியாகவும் அமைந்திருக்கும். மாறாக அவ்விடத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியிருக்கக்கூடாது.

“உண்மையில் சரியோ, பிழையோ ஜனாதிபதி அந்த இடத்தில் இறங்கி வந்ததென்பது ஒரு பெரிய விடயம். கடந்த கால ஜனாதிபதியாக இருந்திருந்தால் குறித்த இடத்தில் தடியடிப்பிரயோகம் மற்றும் நீர்ப்பிரயோகம் அல்லாதவிடத்து நான்கு பேரையாவது இழுத்துக் கொண்டு செல்லும் நடவடிக்கைதான் அவ்விடத்தில் நடந்திருக்கும்.

“ஆகவே, எங்களுக்குக் கடந்த காலத்தைவிட தற்போதய ஆட்சியில் கிடைத்திருக்கும் இவ்வாறான உரிமைகளைச் சாதுரியமாகப் பயன்படுத்த வேண்டும்.

“கைதிகளின் போராட்டம், அவர்களின் கோரிக்கை நியாயமானது. இதனை நாங்கள் உணர்ந்து கொள்கின்றோம். அவர்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், நாங்கள் இதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் மிகவும் சிந்தித்துச் செயற்படவேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .