2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கொடுத்த வாக்குறுதியை, ஜனாதிபதி மறந்தாலும் நாங்கள் கைவிடோம்’

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், எம்.எம்.அஹமட், பேரின்பராஜா சபேஷ், எம்.எம்.அஹமட் அனாம், வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம், ஆர்.ஜெயஸ்ரீராம்

இந்நாட்டு மக்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதியை அவர் மறந்து செயற்பட்டாலும் நாங்கள் அவற்றைக் கைவிடப்போவதில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா, வாகரையில் நேற்று (02) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு தடவை மட்டும்தான் ஜனாதிபதியாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த ஜனாதிபதி, இன்றைக்கு இரண்டாம் தரமாகவும் ஜனாதிபதியாவதைக் கனவாகக் கொண்டு செயற்படுகின்ற காரணத்தாலே, அவரது போக்கு மாறியிருப்பதாகத் தெரிவித்தார். 

அவரை ஜனாதிபதியாக்குகின்ற போது, எமது இனப் பிரச்சினைக்கான தீர்வை எழுத்திலே கொடுக்கத் தயாராக இருந்தார் என்றும் அதற்குத் தானே சாட்சியெனவும் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, கொடுத்த வாக்குறுதிகளைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டிய தார்மிகப் பொறுப்பு இன்னமும் ஜனாதிபதியிடம் இருப்பதாகத் தெரிவித்தார்.  

தெற்கில் இருக்கின்றவர்களுக்கு “சமஷ்டி” என்றால் பயம் ஏற்படுவதாகவும் வடக்கில் இருப்பவர்களுக்கு “ஒற்றையாட்சி” என்று சொன்னால் பீதி ஏற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் என்றும், நாட்டு மக்கள் பார்த்துப் பயப்படுகின்ற ஒரு விடயமாக அரசமைப்பு இருக்கக் கூடாதென அவர் தெரிவித்திருந்தார் என்றும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். 

எனினும், ஜனாதிபதி, அரசமைப்பை மீறியிருப்பதாகவும் இது ஜனநாயகத்துக்கு விரோதமானதெனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக, நாங்கள் எமது கொள்கையையோ, முயற்சியையோ கைவிடப் போவதில்லையெனவும் அதில் நாம் திடமாக இருப்போமெனவும் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, இந்நாட்டிலே, ஓர் அரசமைப்பு, எமது மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசமைப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால், புதியதோர் அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X