2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சித்தாண்டியில் காணாமல்போன 62 பேரின் 27ஆவது நினைவு தினம்

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, சித்தாண்டியில் காணாமல்போன 62 பேரின், 27ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று சனிக்கிழமை (19) அனுஷ்டிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியான சுற்றிவலைப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில் வாழைச்சேனை, பேத்தாளை, முறாவோடை, கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் அபாயத்தை எதிர்நோக்கினர்.

இந்நிலையில், சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தில் நலன்புரி முகாம் அமைத்து, இலங்கையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மேற்கொண்டு வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், பொதுமக்களைத் தஞ்சம் புக வைத்திருந்தது.

அவ்வேளையில், ஆவணி மாதம் முதலாம் திகதியில் இருந்து 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திடீர் சுற்றி வளைப்புகளை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினர், முகாமில் தஞ்சம் புகுந்த இளைஞர்களையும் யுவதிகளையும் மற்றும் கூலித் தொழிலாளிகளையும் 3 சுற்றிவளைப்பு மூலம் மொத்தமாக 62 பேரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றிருந்தனர்.

அவ்வாறு ஏற்றிக்கொண்டு சென்றவர்கள் முறக்கொட்டான்சேனை இராணுவத்தினர் முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டு, இன்றுடன் 27 வருடங்கள் கடந்தும் எவரும் வீடு திரும்பவில்லை.

இன்றைய தினம் குறித்த நிகழ்வை நினைவு கூரும் முகமாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணப்பிள்ளை துரைராஜாசிங்கம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், ஆலயங்களின் தலைவர்கள், சமூக அமைப்புகள், சித்தாண்டி கிராமத்து மக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குரிய நீதி விசாரணை வேண்டி ஆலய முன்றில் வழிபாட்டுடன் நினைவு தினத்தை​ ஆரம்பித்தனர்.

அதன் பின்னர் உறவுகளின் வருகைக்காக அகவணக்கம் செலுத்தி, உறவுகளின் உருவப்படம் தாங்கிய நினைவாலயத்தைப் பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .