2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’சிறுபான்மையினருக்கு துரோகமிழைப்பு’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகி, அமைச்சுப் பதவிப் பெற்ற பைஸர் முஸ்தபா, ஜனநாயகத் தேர்தல் முறைமை குறித்து பேசுவது வேடிக்கையாகவுள்ளது என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், இன்று (03) தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கை பற்றிய தனது கருத்துகளை, அறிக்கையொன்றில் வெளியிட்ட அவர், தேர்தல் முறைமை தொடர்பாக, அமைச்சர் முஸ்தபா மீது, கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

"சிறுபான்மையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அராஜகத் தேர்தல் முறைமையை நியாயப்படுத்த, பைஸர் முஸ்தபா முயல்வது வேடிக்கையாகவுள்ளது. பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி, சிறுபான்மையினருக்குத் துரோகமிழைக்கும் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முன்வரவேண்டும்" என்று, அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கை, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அதை நியாயப்படுத்தி, மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு, அமைச்சர் முஸ்தபா முயல்கிறார் எனவும், முன்னாள் முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

"'அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில், புதிய தேர்தல் முறைமையென்ற விடயம் குறிப்பிடப்பட்டிருப்பதால் தான், அதற்காகப் பாடுபடுகிறேன்' என, பைஸர் முஸ்தபா கூறுவாரேயாயின், நூறு நாள் வேலைத்திட்டத்தின் ஏனைய திட்டங்களுக்கு ஏன் முன்னுரிமையளிக்கப்படவில்லை?" என்று, அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கையை மீண்டும் காரணங்காட்டி, புதிய முறைமையில் தேர்தலை நடத்த முற்படுவார்களாயின், தேர்தலை மேலும் பிற்பபோடும் சதித்திட்டமாக அது அமையுமெனக் குறிப்பிட்ட முன்னாள் முதலமைச்சர், அதற்கு எந்தவோர் அரசியல் கட்சியும் இடமளிக்கக்கூடாது என்றும், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் போர்க்கொடி தூக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, புதிய தேர்தல் முறைமையை மீண்டும் கொண்டுவர அமைச்சர் முஸ்தபா முற்பட்டால், நாடாளுமன்றத்தைச் சுற்றிவளைத்து முற்றுகைப் போராட்டம் நடத்த, சிறுபான்மை மக்கள் முன்வரவேண்டும் என்று, அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .