2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுயேட்சை குழுவுக்கு வழிவிடுமாறு கோரிக்கை

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“காரைதீவு பிரதேசத்தின் ஒற்றுமையை கருத்தில்கொண்டு ஊர் சார்பில் ஒரேயொரு பொது சுயேட்சை குழுவே களமிறங்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கமைவாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பவற்றின் பிரதேச செயற்பாட்டாளர்கள் கட்சி சார்ந்த தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி கொண்டது போன்று, ஏனைய அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்களும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்” என, காரைதீவு மகா சபைத் தலைவர் கே.தட்சணாமூர்த்தி கோரிக்கை விடுத்தார்.    

காரைதீவு பிரதேச சபை தேர்தலுக்கான பொது சுயேட்சை குழு தொடர்பில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது ஊரின் ஒற்றுமை கருதி, இந்த இரு அரசியல் கட்சிகளின் காரைதீவுப் பிரதேச முக்கியஸ்தர்களான பி.ரி.தர்மலிங்கம் மற்றும் கே.குமாரஸ்ரீ ஆகியோர் எமது கூட்டங்களுக்கு சமுகமளித்து ஒத்துழைத்தது மாத்திரமல்ல தமது கட்சித்தலைமைப் பீடங்களுக்கு ஊர் நிலைப்பாட்டை எடுத்துச்சொல்லி, கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்குவதில் இருந்து தவிர்த்தமை மிகவும் பாராட்டுக்குரியது.

“ஊர்த் தீர்மானத்தை மீறிய துரோகிகள் எனத்தாம் பெயரெடுக்க விரும்பவில்லையெனவும் தாம் ஒதுங்கி பார்வையாளர்களாக இருக்க விரும்புவதாக அவர்கள்  தெரிவித்துள்ளமை எமக்கு உற்சாகமளிக்கின்றது.

 

“இதனையே ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்களிடம் எதிர்பார்க்கின்றோம். அவர்களும் இவ்வழியைப்பின்பற்ற வேண்டும் என்பது எமதூர் மக்களின் கோரிக்கையாகும்.

“கட்சிக்காக மக்களல்ல. மக்களுக்காவே கட்சி. மக்களின் விருப்பம், அபிலாசைகள் அறிந்து கட்சிகள் இயங்க வேண்டுமே தவிர, கட்சியின் தீர்மானத்தை மக்களிடம் திணித்தல் ஜனநாயகப் பண்பாகாது.

“உண்மையில் நாம் எந்தக்கட்சிகளுக்கும் எதிரானவர்களல்ல. சகல கட்சிகளை சேர்ந்தோரையும் இந்த அணியில் தேர்தலில் போட்டியிடலாமென அழைப்பு விடுத்திருந்தோம். யாரையும் அல்லது எந்தக்கட்சியையும் ஒதுக்கவில்லை. தன்னிச்சையாகச் செயற்படவுமில்லை.

“எமது அழைப்பை ஏற்று இரு கட்சிகளின் செயற்பாட்டாளர்களே விண்ணப்பித்தனர். அவர்கள் வேட்பாளர் தெரிவின்போது சமுகமளிக்கவில்லை அல்லது தெரிவாகவில்லை என்பது தான் உண்மை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .