2024 மார்ச் 28, வியாழக்கிழமை

த.தே.கூவிலிருந்து வௌ்ளிமலை வெளியேறினார்

Editorial   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப்போவதாகவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுயேட்சையாகவோ அல்லது வேறு தமிழ்க் கட்சிகளுடனோ இணைந்து செயற்படவுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினருமான “வெள்ளிமலை” என அழைக்கப்படும் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சிக்காக, 1965ஆம் ஆண்டில் இருந்து ஒரு தொண்டனாக சேவையாற்றிவந்ததாகவும் இன்று தன்னை அந்தக் கட்சி புறந்தள்ளிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில், சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக உழைத்தவர்கள் புறந்தள்ளப்பட்டு பணம் படைத்தவர்களுக்கும் மண் கொள்ளையர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“பாமர மக்களைக் கருவேற்பிலைபோல் பயன்படுத்திவிட்டு, பணம் படைத்தவர்களையும் கல்விமான்களையும் வளப்படுத்துவது பொறுத்தமற்றது என்பதுடன், வாக்களித்த மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“வீட்டைச் சின்னமாக கொண்ட தமிழரசுக் கட்சியின் தொண்டனாக, நான், 1965ஆம் ஆண்டிலிருந்து இயங்கி, இற்றைவரை தமிழ்த் தேசியத்துக்காக எனது குடும்பத்தை அர்ப்பணித்தவன் என்ற வகையில், தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முன்னாலும் தமிழ்த் தேசியம் ஒன்றுபடவேண்டும் என உரக்க குரல் கொடுத்தவன் என்ற வகையிலும் பாடுபட்டு வந்தேன்.

“ஆனால், தற்போதைய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் மேலும் ஒருசிலரும் இணைந்து என்னைத் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி வருமாறும் அக்கடிதத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கூறியதற்கு அமைவாக கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி அக்கடிதத்தை ஒப்படைத்தேன்.

“அவ்வேளையில், பொதுச் செயலாளர் ஊடாக தமிழரசுக் கட்சியின் 25 விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன.  அப்படிவத்தை 15ஆம் திகதி கொண்டுவருவதற்காக அனுமதி கேட்டிருந்தேன். அன்றைய தினம் கொழும்பிற்கு செல்லவிருப்பதாகவும் படிவத்தை அதற்குப் பின்னர் கொண்டுவருமாறும் பொதுச் செயலாளர் என்னிடம் கூறியிருந்தார்.

“அதனைத் தொடர்ந்து இரண்டாம் மாதம் 16ஆம் திகதி, மூன்றாம் மாதம் 24ஆம் திகதி என செப்டெம்பர் மாதம் வரை என்னையும் எனது ஆதரவாளர்களையும் தொடர்ந்து ஏமாற்றிய பின்னர் தொகுதி ரீதியாக தேர்தல் நடைபெறவிருக்கின்றபடியால் உங்களை எமது கட்சியினுள் உள்வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கின்றது என பொதுச் செயலாளர் கூறினார்.

“எனது கட்சியிலிருந்து என்னை விலகிவிடுமாறும், கடிதத்தை ஒப்படைக்குமாறும் கூறிக் கடிதத்தை வாங்கி 11 மாதங்கள் என்னை ஏமாற்றிய பின்னர் என்னிடம் இப்படிக் கூறுவது தலைமைத்துவத்துக்குப் பொருத்தமான நடவடிக்கையா என நான் கேட்டபோது, இக்கால சூழலில் உங்களை உள்வாங்க முடியாதுள்ளது. நீங்கள் மாற்று வழியை நாடுங்கள் என பொதுச் செயலாளர் கூறினார்.

“ஆகவே, 11 மாதங்கள் ஏமாற்றப்பட்ட பின்னர் கட்சியிலிருந்து விலக வேண்டும். அதன் பின்னர் என்னை நம்பியுள்ள மக்களை வளம் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், சுயேச்சைக்குழுவாக அல்லது தனிப்பட்ட கட்சிகளோடு இணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளேன். பெரும்பான்மைக் கட்சிகளோடு இணைந்து செயற்படும் எண்ணம் எனக்கில்லை. தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கு 1965ஆம் ஆண்டிலிருந்து பாடுபட்ட நான் தொடர்ந்தும் பாடுபடுவேன். தமிழரசுக் கட்சிபோன்று நான் யாருடைய மனதையும் நோகடிக்காமல் அனைவரது அரவணைப்போடும் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்காக உழைப்பேன்.

“என்னை ஏமாற்றிய தமிழரசுக் கட்சியிலிருந்து, வெளியேறி விட்டேன் என்பதையும் எதிர்வரும் காலங்களில் என்னை நம்பியிருக்கின்ற மக்களுக்கு நான் மரணிப்பதற்கு முன்னர் என்னாலான அனைத்து உதவிகளையும் அரசியலூடாக செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். எனது நோக்கத்தையும் மக்களின் வேண்டுகோளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற அவாவுடன் தான் நான் வெளியேறுகின்றேன். சுயேட்சையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுப்பேன்.

“தமிழ்த் தேசியத்தை வளர்த்தவர்கள் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற பாமர வர்க்கத்தை சேர்ந்தவர்களே தவிர தனவந்தர்களோ கல்விமான்களோ அல்ல. வடக்கு, கிழக்கில் 85 சதவீதத்துக்கும் மேல் வாழ்கின்ற மக்கள் பாமர மக்களாவர்.

“அந்த மக்களே தமது வாக்குகள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாகாணசபை உறுப்பினர்களையும் பிரதேசசபை உறுப்பினர்களையும் உருவாக்கினார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் தனவந்தர்களுக்கும் கல்விமான்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் மண் கொள்ளையர்களுக்கும் பணத்தை காட்டி ஆசனம் கேட்கின்றவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

“தமிழ் மக்களை வழிநடத்துகின்றவர்களென தங்களைத் தாங்களே கூறிக்கொண்டிருக்கின்ற தலைவர்கள், தாங்கள் வாழ்வதற்காக மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவது பொருத்தமற்ற நடவடிக்கையாகும். பாமர மக்களை கறிவேப்பிலைபோல உபயோகித்துவிட்டு தனவந்தர்களையும் கல்விமான்களையும் வளப்படுத்துவது வருங்காலத்துக்கு பொருத்தமற்றது.

“எதிர்காலத்தில் தமிழ்த் தேசியமும் தமிழர் ஒற்றுமையும் மலரவேண்டுமாயின் வாக்களித்த பாமர மக்களை மக்களாகக் கருத வேண்டும். மக்களின் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும். தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை கடவுளாக மதித்துவிட்டு வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற பின்னர் தனவந்தர்களையும் கல்விமான்களையும் வளம்பெறச் செய்கின்றனர்.

தமிழ் மக்கள் கல்வி, கலாசாரம்,பொருளாதாரம்,பண்பாடு மற்றும் பாரம்பரியம் என அனைத்து விடயங்களிலும் மேலோங்கி நிற்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தமிழ்த் தலைமைகள் பதவிக்காக அடிபட்டு மக்களை மேலும் மேலும் படுபாதாளத்தில் தள்ளாது அனைத்து துறைகளிலும் மக்களை முன்னேற்றுவதற்கு வழியேற்படுத்த வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X