2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவரிடம் டி.ஐ.டி விசாரணை

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பை வைத்துள்ளார் என்ற சந்தேகத்தில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரிடம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு நேற்று முன்தினம் (16) அழைக்கப்பட்ட ஒன்றியத்தின் தலைவரும் சுயாதீன ஊடகவியலாளருமான வா.கிருஸ்ணகுமாரிடம், சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், வாக்குமூலம் ஒன்றையும் பதிவுசெய்துள்ளனர்.

குறித்த விசாரணையின் போது, "விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?", "வெளிநாட்டில் உள்ள ஊடகங்களுக்கு அரசாங்கத்தைப் பற்றி தவறாக செய்திகளை அனுப்புகிறீர்களா?", "புலம்பெயர்ந்த புலிகள் அமைப்புகளுடன் தொடர்பை வைத்துள்ளீர்களா?", "விடுதலைப் புலிகளிடம் நீங்கள் பயிற்சி எடுத்துள்ளீர்களா?", "அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளீர்களா?", "அரசாங்கத்திற்கு எதிராக புலம்பெயர்ந்த அமைப்புகள், புலம்பெயர் ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றீர்களா?" உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்டு விசாரணைகளை நடத்தினர் என, விசாரணைகளின் பின்னர் கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.

மேலும், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ் ஊடகவியலாளர்களுக்குக் கடந்த ஆட்சியில் நடைபெற்றதைப் போன்று மீண்டும் விசாரணைகள் இடம்பெறுவது, சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களையும் செயற்பாடுகளையும் முடக்குவதும், மட்டக்களப்பில் நடைபெறும் ஊழல்களையும் அரச அமைச்சர்களால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு உள்ளிட்ட, தமிழ் மக்களுக்கு எதிரான செய்திகளை வெளியுலகுக்குக் கொண்டுசெல்வதைத் தடுக்கும் நோக்குடனேயே, இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என, அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .