2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘ தமிழ் மக்களின் விடிவுக்காக உள்ளத்தூய்மையுடன் ஒன்றிணையவும்’

வா.கிருஸ்ணா   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உள்ளத்தூய்மையுடன் செயற்படும் கட்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் விடிவுக்காக ஒன்றிணையவேண்டுமென, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெறுமனே ஆசனத்துக்காகச் செயற்படமுடியாது எனத் தெரிவித்துள்ள அவர், தாங்கள் விட்டுக்கொடுப்புக்குத் தயாராகயிருப்பதாகவும் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு ஊடக மய்யத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

தமது கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம், கட்சியின் மட்டக்களப்பு இளைஞர் குழுவின் தலைவர் சட்டத்தரணி நவரெட்ணராஜா கமல்தாஸ் ஆகியோரை நியமிப்பதென, மாவட்டப் பொதுச்சபை கூடி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதென்பது வரவேற்கக்கூடிய விடயமெனக் கூறிய அவர், அவ்வாறு இணையும் போது, கூட்டமைப்பால் 22 ஆசனங்களை சுலபமாகப் பெற முடியுமென்றார்.

ஏனெனில், மக்கள் ஒற்றுமையை மிகவும் விரும்புகின்றார்கள் என்றும் உள்ளே வந்து நாட்டாமைத் தனம் அல்லது மற்றவர்களை அனுசரிக்காத தன்மையை உண்டுபண்ணிவிடக் கூடாது என்றும் கூறிய அவர், “அந்த வகையிலே எல்லாரையும் அனுசரித்தச் செல்லக் கூடிய, மக்களின் விடிவை எண்ணி இருப்பவர்கள் முன்வர வேண்டும்” என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைத் தெரிவு செய்வதில் கூட்டமைப்பில் இருக்கின்ற மூன்று கட்சிகளுக்கும் பங்கு இருப்பதாகவும் குறித்த மூன்று கட்சிகளும் இணைந்தே தலைவரைத் தெரிவு செய்யுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .