2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திண்மக்கழிவகற்றல் சேவைக்கு புதிய வாகனங்கள் கொள்வனவு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 நவம்பர் 28 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் கல்முனை மாநகர சபை எதிர்நோக்கி வருகின்ற பாரிய சவாலை வெற்றிகொண்டு, அச்சேவையை வினைத்திறனுடன் திருப்திகரமாக முன்னெடுக்கும் பொருட்டு, புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவது தொடர்பில், வைத்தியசாலைகளின் பொறுப்பதிகாரிகள், சுகாதாரப் பிரிவினருடன், மாநகர மேயர் செயலகத்தில் இன்று (28) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே, அவர் இதனைத்  தெரிவித்தார்.

அங்கு முதல்வர் றகீப் மேலும் தெரிவிக்கையில், கல்முனை மாநகர சபையால் திண்மக்கழிவகற்றல் சேவையை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் இருந்து வருகின்ற பின்னடைவுக்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அவற்றுள் வாகனப் பற்றாக்குறையே பிரதான காரணமாக இருப்பதாகவும் கடந்த பத்து அல்லது இருபது வருடங்களாக 12 பழைய வாகனங்களே, இந்தச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது, திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாநகர சபையின் சொந்த வருமானத்தில் இருந்து நாளொன்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த நிதியை திரட்டுவதே பெரும் சவாலாக இருந்து வருகின்றமையால், இதற்குத் தீர்வாக அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம், திண்மக்கழிவகற்றல் சேவைக்கான குப்பை வரியை அறவீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் தெரிவித்தார்.

ஒரு வீட்டுக்கு, நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் வீதமும் சாதாரண கடைகளுக்கு, 20 ரூபாய் வீதமும் ஹோட்டல்கள், நிறுவனங்களுக்கு 30 -100 ரூபாய் வரையும் இக்கட்டணத்தை அறவீடு செய்ய உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .