2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொற்றுநோய் காரணமாக இறைச்சிக் கடைகளை மூடுமாறு உத்தரவு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ் வரும் சகல கொல் களங்களையும்,  மாட்டிறைச்சிக் கடைகளையும் இரு வாரங்களுக்கு மூடுமாறு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது விடயமான பணிப்புரையை உடனடியாக அமுல்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஏறாவூர் நகர சபைக்கும் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபைக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஏறாவூர் நகர சபைப் பிரிவிலுள்ள 14 இறைச்சிக் கடைகளும் நாளை (27)  தொடக்கம் அடுத்து வரும் இரு வாரங்களுக்கும் மாட்டு இறைச்சியை விற்பனை செய்ய முடியாது.

அதேபோன்று, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைப் பிரிவின் கீழ் வரும் 9 மாட்டிறைச்சிக் கடைகளுக்குமாகவும் இந்த உத்தரவை அமுல்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், இந்த உத்தரவு ஆட்டிறைச்சிக் கடைகளுக்கும் கோழி இறைச்சிக் கடைகளுக்கும் விடுக்கப்படவில்லை.

நோய்த் தொற்றுக்களுக்குள்ளான மாடுகள், கொல் களத்துக்கு கொண்டு வருகின்ற சந்தர்ப்பத்தில், அவை பொதுச் சகாதாரப் பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என நிராகரிக்கப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்ட விடயங்கள், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

மாடுகளுக்குத் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் நுகர்வுக்குத் தரமான, பாதுகாப்பான மாட்டிறைச்சி உணவை வழங்குவதில் சிரமங்கள் ஏற்படலாம்.

எனவே, வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் இரு வாரங்களுக்கு கொல் களங்ளை மூடி விடுவதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .