2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புதிய முறை மாகாண சபைத் தேர்தல்; சிறுபான்மையினருக்கு அநீதி’

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மாகாண சபைத் தேர்தல், புதிய முறைமையின் பிரகாரம், தொகுதி ரீதியாக நடைபெற்றால், வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்படுமென, கடற்றொழில் நீரியல் வள மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். 

பிரதியமைச்சரின் நிதியொதுக்கீட்டில், சலவைத் தொழில் செய்வோருக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, வந்தாறுமூலையில் நேற்று (13) மாலை நடைபெற்றது.  

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர், இந்த நாட்டில் அரசியல் மாற்றங்கள் நிகழ வேண்டுமென்பதற்காகப் பல அரசியல் கட்சிகள் முனைப்போடு செயற்பட்டுக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.  

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை வட்டார அடிப்படையில் நடத்துவதில் பிரச்சினை இருக்கிறது என்பது பற்றித் தாங்கள் சுட்டிக்காட்டியவேளை, அரசியல் தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனத் தெரிவித்த அவர், தேர்தல் முடிந்த பின்பு, சபைகளில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட கஷ்டங்களும் முரண்பாடுகளும், அவர்களுக்குப் படிப்பினையாக அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.  

ஒரு பிழையான உள்ளூராட்சி சபைத் தேர்தலை நாங்கள் நடத்தி முடித்துள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், புதிய முறையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தபட வேண்டுமென, ஆளும் தரப்பினரிடையே வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.  

ஒவ்வொரு பகுதிகளிலும், சிறிது சிறிதாக வாழ்கின்ற மக்கள், உள்ளூராட்சி சபைகளுக்கோ மாகாணசபைத் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ ஒரு பிரதிநிதியைத் தெரிவு செய்ய முடியாதவகையில், இந்தப் புதிய தேர்தல் முறை காணப்படுகிறது என்பதை, தமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.  

எனவே, எதிர்வரும் காலங்களில், எக்காரணம் கொண்டும் புதிய தேர்தல் முறைப்படி தேர்தல்களை நடத்துவதற்கு சிறுபான்மைக் கட்சிகள் இடமளிக்கக் கூடாது என்றும் வடக்கு, கிழக்குக்கு அப்பால் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சிறுபான்மைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள், தங்களுக்கென ஒரு பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் வைக்கின்ற இந்தத் திட்டமிட்ட தேர்தல் முறை, சிறுபான்மையினரின் குரல் வளைகளை நசுக்குகின்ற வகையில் செய்கின்ற எத்தனிப்பே தவிர, சிறுபான்மை மக்களுக்கு அரசியல் உரிமையைக் கொடுக்கும் வேலைத்திட்டமாகத் தெரியவில்லையென்றும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X