2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புறாக்களை திருடிய ஐவர் கைது ; 82 புறாக்கள் மீட்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புறாக்களைத் திருடி வந்த ஐவர், இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் 82 புறாக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக புறாக்கள் திருடப்பட்டு வந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து வந்த காத்தான்குடி பொலிஸார், குறித்த 5 பேரையும் கைதுசெய்ததுடன் 82 புறாக்களை மீட்டு, திருடுவதற்குப் பயன்படுத்திய சிறிய லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்லம் மற்றும் கல்லடியிலுள்ள 2 வீடுகள் மற்றும் மட்டக்களப்பிலுள்ள 2 வர்த்தக நிலையங்கள் என்பவற்றிலிருந்து இந்தப் புறாக்கள் திருடப்பட்டுள்ளன.

அத்தோடு, புறாக்கள் திருடப்படுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 6 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் எட்டவரவின் ஆலோசனையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.பி.கஸ்தூரி ஆராச்சியின் வழிகாட்டலில் பொலிஸ் உப பரிசோதகர் நிமால் பிறேமசிரீ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜயலத் நிகலகம மற்றும் சிந்துஜன், நிரோசன், பிரபாகரன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 82 புறாக்களையும் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய சிறிய லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களில் மருதமுனையைச் சேர்ந்த இருவரும், மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த இருவரும் கோட்டடைக்கல்லாறைச் சேர்ந்த ஒருவருமாக ஐவர் என, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X