2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘பேதம் வளர்க்கும் வகையில் தீர்மானம் எடுப்பதில்லை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழ்-முஸ்லிம் என்ற பேதம் வளர்க்கும் வகையில் நானோ அல்லது எனது தலைமையிலான பிரதேச சபை நிர்வாகமோ எந்தத் தீர்மானமும் எடுப்பதில்லையென, கோறளைப்பற்று பிரதேச சபைத் தலைவர் ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

கோறளைப்பற்றுப் பிரதேச சபையினதும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவினதும்  நிர்வாகத்துக்குட்பட்ட பொண்டுகள்சேனை நீரோடையை, கோறளைப்பற்று பிரதேச சபை புனித கங்கையாகக் கருதி கடந்த வாரம் அறிவித்தல் பலகை நாட்டியுள்ளது.

இதனால் கடந்த ஒரு சில நாட்களாக இது பற்றிய சர்ச்சை குறித்து கண்டனங்களும் வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன.

எனவே, இது குறித்து பிரதேச சபைத் தலைவர், இன்று (15) ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

இந்த விவகாரம் பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இது என்னால் தனிப்பட்ட முறையிலோ அல்லது எதுவித முன்னறிவித்தலுமில்லாது பிரேரணையின்றியும் சபைத் தீர்மானமின்றியும் ஒரு போதும் பிரகடப்படுத்தப்படவில்லை.

“கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கோராவெளி, பிரதேச மக்கள், பெரிய கோவில் நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தில்  முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் என்பனவற்றுக்கமைவாக, பிரதேச  சபை உறுப்பினர் காளிக்குட்டி நடராஜா, கடந்த ஏப்ரல் மாதம் இதனைப் பிரேரணையாக முன்வைத்ததன் அடிப்படையில், அதை சபை மே மாதம்  தீர்மானமாக நிறைவேற்றியது.

“அதன் பிரகாரமே குறிப்பிட்ட உறுப்பினர் அந்த அறிவித்தல் பலகையை கடந்த வாரம் குறிப்பிட்ட அந்த நீரோடைப் பிரதேசத்தில் நாட்டியுள்ளார்.

“அந்த பிரகடனத்தின்படி, குறிப்பிட்ட நீரோடைப் பகுதியில் பொழுது  போக்குக்காக வருபவர்கள், குறிப்பிட்ட பகுதியில் வைத்து வைத்து மதுபானம் பாவித்தல், மாமிசங்களைக் கொண்டு வந்து அதன் எச்சங்களை நீரோடையிலும் அதன் சுற்றுப்பறங்களிலும் வீசுதல், நீரோடையில் மாமிச இரத்தங்களைக் கழுவுதல், அந்தப் பிரதேசத்தில் குளித்தல், நீரில் மூழ்கிக் குளித்தல் என்பனவும்  தடை செய்யப்பட்டுள்ளன.

“இந்த நீரோடையிலிருந்து பெறப்படுகின்ற நீரே சுத்திகரிக்கப்பட்டு, திகிலிவெட்டை கிராம மக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது. அந்த மக்களும் இந்த நீரோடையில் மாமிச எச்சங்கள் கலந்துள்ளதாக, எமது கரிசனைக்குக் கொண்டுவந்திருந்தனர்.

“மேலும், அந்த நீரோடையில் நீர் திடீரென அதிகரிப்பதால் அங்கு நீராடுபவர்கள் மூழ்கித் தத்தளிக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு.

“இவ்வாறு பல நிலைமைகளைக் கருத்திற்கொண்டே சபையில் பிரேரணை கொண்டு வரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தமிழ் - முஸ்லிம் என்ற இன அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

“தமிழரோ முஸ்லிமோ அல்லது வேறு எந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இரந்தாலும் சுற்றுச்சூழலை தூய்மை மாறாது பேணிப் பாதுகாக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.

“அந்த வகையில் இது அனைத்து சமூகத்தவர்களுக்கும் நன்மையான விடயமே அன்றி, இன அடிப்படையில் தீமை விளைவிக்கக் கூடியதல்ல” என்று அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X