2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘பொறுப்பிலிருந்து விலகினால் மக்கள் நிராகரிப்பர்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர்களை சிறையிலிருந்து மீட்பதற்கான முழுப்பொறுப்பும் தமிழர்களின் உரிமைகளைப் பேசி வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு உண்டு எனத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான, இரா. துரைரெத்தினம், அப்பொறுப்பிலிருந்து விலகினால் மக்கள், அவர்களை நிராகரிப்பர் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் உரிமைகள் தொடர்பாக பல தசாப்த காலமாக அரசியல், வெகு ஜனரீதியாக போராடி இப்போராட்டம், 1980 ஆம்ஆண்டு இறுதிப்பகுதியில் ஆயுதப் போராட்டமாக மாற்றம் அடைவதற்கான சூழலை, அன்றிருந்த இலங்கை அரசாங்கமே உருவாக்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை அரசாங்கம் உருவாக்கிய சூழலின் தொடர்ச்சியாக கட்சிகள், இயக்கங்கள் உருவாக்கப்பட்டு விலைமதிக்க முடியாத சொத்துக்கள்,  உயிர்களை காவு கொடுத்தது ஆயுதப் போராட்டம். அப்போராட்டம் மௌனிக்கப்பட்டு,  சர்வதேச ரீதியாக உரிமைகள் பறைசாற்றப்பட்டு, இன்று சர்வதேச ரீதியாக அரசியல் உரிமைகளை பெறும் நிலைக்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரங்கள் தொடர்பாக மறுதளிக்கின்ற நிலையில் அரசியற் கட்சிகளாகிய நாங்கள் இலங்கையிலுள்ள நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள் போன்றவற்றின் ஊடாக,  குறிப்பாக நாடாளுமன்றம் என்பது சட்டத்தை உருவாக்குகின்ற மன்றமாகும். இதன் ஊடாக எமக்கான தேவைகளை, குறைபாடுகளை, உரிமைகளை அபிவிருத்தி வேலைகளை, அத்துமீறல்களை அம்பலப்படுத்தி  அமுல்படுத்தவேண்டிய பொறுப்பு உண்டு” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

அபிவிருத்தி தொடர்பாக மட்டும் நாடாளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உள்ள சட்டத்தை அமுலாக்குதல், புதியச்சட்டங்களை உருவாக்குதல்,எமது அடிப்படை உரிமை தொடர்பாக கோரிக்கைகளை முன் வைத்து தீர்த்துக் கொள்ளுதல் இந்த நிலையில் எமது உரிமைக்காக போராடிய பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து , இடம் பெயர்ந்து,  நிர்க்கதியாக்கப்பட்ட நிலையில் வாழ முடியாத நிலையிலும்,விதவையாக்கப்பட்ட நிலையிலும் கவனிப்பாரற்ற நிலையில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், தொடர்பாக விசேட கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட வேண்டும். பார்க்க வேண்டிய பொறுப்பு அரசியற் தலைமைகளுக்கு உண்டு குறிப்பாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு என்றும் அவ்வறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பாக  தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் வரவு- செலவுத்  திட்டத்தில் ஒரு தீர்க்கமான ஒரு முடிவுக்கு  வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு ஓங்கி அதிகரித்திருந்தது. எனவே, இந்த வாக்குறுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைமைகள் காப்பாற்ற வேண்டும்.

1971ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக பாரிய கிளர்ச்சியை மேற்கொண்ட ஜே.வி.பி.யினரை கைது செய்து சிறைக்கூடங்களில் அடைத்தவர்கள் பின்னர் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியதோடு, 1987ஆம் ஆண்டு கூட இயக்கங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தனர்.

இதேவேளை, தமது மக்களின் நியாயமான உரிமைக்காக போராடிய தமிழ் அரசியற் கைதிகளை பல வருடகாலமாக சிறையில் அடைத்து வைத்திருக்கின்றது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் அந்த அறிக்கையில் வினவியுள்ளார்.

யுத்த தர்மத்தை கண்டிப்பாக வலியுறுத்துகின்ற பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற நாட்டில் யுத்த தர்மம் கேள்விக் குறியாகியுள்ளதா? சிறைவாசத்தின் அனுபவத்தை சந்தித்த ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்காமல் இருப்பது ஏன்?

எனவே, ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத்தில், ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதன் ஊடாக கைதிகளின் விடுதலை சட்டத்துக்குள் இருந்தாலும் சாத்தியமாகும். எனவே, எதிர்வருகின்ற வரவு- செலவுத் திட்டத்தில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வலுவான முடிவை, நாடாளுமன்றத்தில் எடுத்து, அதனை அமுல்படுத்த வேண்டும் என்றும் அ​வ்வறிக்கையின் ஊடாகக் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X