2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’மக்கள் கைகளில் ஆட்சிப் பொறுப்பு’

Princiya Dixci   / 2021 ஜனவரி 26 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

அதிகாரப் பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்), “மாகாண சபை முறைமை வருமாக இருந்தால், மாகாண சபையை ஆட்சியமைக்கும் பொறுப்பும் ஆட்சியமைக்க வைக்கும் பொறுப்பும் மக்கள் கையில் உள்ளது” என்றார். 

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுங்கான்கேணி கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியும் மக்கள் சந்திப்பு, சுங்கான்கேணி பிள்ளையார் கோவில் முன்றலில் இன்று (26) நடைபெற்றது. 

இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

“எனது மக்கள் பணி தொடரும். அதில் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. வீதிகள், பாடசாலைகள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும். இந்த வருடம் அபிவிருத்திகள் ஓரளவு இடம்பெற்றாலும், 2022ஆம், 2023ஆம் ஆண்டளவில் அதிகளவான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். 

“கொரோனா தாக்கம் காரணமாக உலக பொருளாதாரத்தில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டிலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். 

“கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் தற்போது டெங்குத் தொற்றும் அதிகரித்துள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தில் டெங்கு அதிகரித்துள்ளது. மழை நீர் தேங்கி நிற்பதும், மக்கள் குப்பைகளை சரியான முறையில் அகற்றாமை, உள்ளூராட்சி மன்றங்களும் சரியான முறையில் இயங்காமையே காரணம் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

“அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். மாகாண சபை முறைமை ஒன்று வருமாக இருந்தால், மாகாண சபையை ஆட்சியமைக்கும் பொறுப்பும், ஆட்சியமைக்க வைக்கும் பொறுப்பும் உங்கள் கைகளில் உள்ளது. அரச கொள்கையினுடாக வரும் அனைத்து விடயங்களும் செய்து தருவேன்” என்றார். 

பாரம்பரிய உற்பத்தியை நம்பி வாழும் மக்கள் நாம். இதனை மேம்படுத்த வேண்டும். அதிலும் இதனை குறைந்த விலைக்கு விற்கும் நிலைமைக்கு மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. இதனை மாற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என்றார்.

சுங்கான்கேணி பிள்ளையார் ஆலய தலைவர் எஸ்.பாலன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித், கிராம சேவை அதிகாரி எஸ்.ஹரிகரன், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .